பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னையில் மட்டும் 18 ஆயிரம் காவலர்கள் பணியமர்த்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விமானநிலையம், ரயில் நிலையங்கள், கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் வழிபாட்டுத்தலங்களில் ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திருப்பூர் மாநகரில் 700-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தீவிர சோதணைக்குப் பிறகே பயணிகள் ரயில் நிலையங்களில் அனுமதிக்கப்படுகின்றனர். நாகை மாவட்டம் பொறையாறு அருகே, காரைக்கால் எல்லையில் உள்ள நண்டலாறு சோதனைச் சாவடியில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திருச்செந்தூர் அருகே உள்ள காயல்பட்டினத்தில் உள்ள அனைத்து வியாபாரிகளும் கடைகளை அடைத்துப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேசமயம், பேருந்துகள் வழக்கம்போல் செயல்படுகின்றன.