பாரதீய ஜனதாவுடன் ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி கூட்டணி சேருவது உறுதியாகிவிட்டது

பாரதீய ஜனதாவின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் முன்பு ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியும் இடம்பெற்றிருந்தது. பின்னர் 2002–ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரெயில் எரிப்புக்கு பின் நடந்த கலவரம் காரணமாக அந்த கூட்டணியில் இருந்து லோக் ஜனசக்தி தான் முதலில் வெளியேறியது.

அதனை தொடர்ந்து மேலும் 6 கட்சிகள் அந்த கூட்டணியில் இருந்து விலகின. பின்னர் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் லோக் ஜனசக்தி இணைந்தது. 2004–ல் இந்த கூட்டணி ஆட்சியையும் பிடித்து ராம்விலாஸ் பஸ்வான் மத்திய மந்திரியானார். மற்றொரு கூட்டணி தலைவரான லாலுபிரசாத் ரெயில்வே மந்திரியானார்.

2009 பாராளுமன்ற தேர்தலில் ராஷ்டிரீய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகியது. அப்போது 40 பாராளுமன்ற தொகுதிகளை கொண்ட பீகார் மாநிலத்தில் லோக் ஜனசக்தி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. லாலு கட்சிக்கு 4 இடங்கள் மட்டுமே கிடைத்தது.

இப்போதும் ஆரம்பத்தில் காங்கிரஸ் கூட்டணியில் சேரவே ராம்விலாஸ் பஸ்வானும், லாலு பிரசாத்தும் முடிவு செய்தனர். இதற்கான ஆரம்ப பேச்சுவார்த்தைகளும் நடந்தது. ஆனால் இப்போது லோக் ஜனசக்தி பாரதீய ஜனதா தலைமையிலான கூட்டணியில் இணைகிறது.

நேற்று ராம்விலாஸ் பஸ்வான் தலைமையில் அவரது வீட்டில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். கூட்டம் முடிந்ததும் கட்சியின் முன்னாள் எம்.பி. சுராஜ்பான் சிங் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘பாரதீய ஜனதா, லோக் ஜனசக்தி இடையிலான கூட்டணி இறுதி செய்யப்பட்டுவிட்டது’’ என்றார்.

குஜராத் கலவரத்தால் முதலில் வெளியே வந்த நீங்கள் இப்போது நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எப்படி இந்த முடிவை எடுத்தீர்கள்? என்று கேட்டதற்கு, ‘‘நரேந்திர மோடிக்கு இதில் தொடர்பில்லை என்று கோர்ட்டு கூறிவிட்ட பின்னர் நாங்கள் இதில் என்ன கூறமுடியும்’’ என்றார்.

விரைவில் கூட்டணி பற்றிய அறிவிப்பு முறைப்படி வெளியிடப்படும். கட்சி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் விரைவில் பாரதீய ஜனதா கட்சி தலைவர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசுவார் என்றும் சுராஜ்பான் கூறினார்.

ஆனாலும் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் காலிக் கூறும்போது, ‘‘இறுதி முடிவு இன்னும் எடுக்கவில்லை. ஓரிரு நாளில் கூடவுள்ள பாராளுமன்ற குழு தான் இதனை முடிவு செய்யும். இப்போதைக்கு காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சிகளுடன் தான் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது’’ என்றார்.

காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி இறுதி செய்வதில் ஏற்படும் காலதாமதம் காரணமாக தொண்டர்கள் நாம் வேறு வழியை காணவேண்டும் என்று அழுத்தம் கொடுத்ததாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத தலைவர் ஒருவர் கூறினார்.

பீகார் மாநில பாரதீய ஜனதா தலைவர்கள் சிலர் சமீபத்தில் ராம்விலாஸ் பஸ்வானை சந்தித்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

கூட்டணிஜனசக்திபாஜக
Comments (0)
Add Comment