பாலஸ்தீனத்தை சேர்ந்த போராட்டக்காரர்கள் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்தியதுப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள் உள்பட 41 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் சுமார் 1800 பேர் காயமடைந்ததாகவும் பாலஸ்தீனம் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிழக்கு ஜெருசலேம் நகரில் இன்று அமெரிக்க தூதரகம் திறக்கப்படும் நிலையில் காஸா எல்லைப்பகுதியில் சுமார் 35 ஆயிரம் பாலஸ்தீனர்கள் உச்சகட்ட போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காஸா எல்லைப்பகுதியில் யாரும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த கூடாது என இஸ்ரேல் அரசின் சார்பில் நேற்று துண்டு பிரசுரங்கள் வீசப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
எனினும் அதை பொருட்படுத்தாமல் காஸா எல்லையோரத்தில் உள்ள தடுப்பு வேலியின் அருகே பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்காரணமாக இஸ்ரேல் இராணுவம் போராட்டக்காரர்கள்மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாலஸ்தீன அரசாங்கம்
இந்நிலையில் இஸ்ரேல் அரசின் இந்த கொடூரமான தாக்குதலுக்கு பாலஸ்தீன அரசாங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அதோடு இந்த விடயத்தில் சர்வதேச நாடுகள் உடனடியாக தலையிட வேண்டும் என பாலஸ்தீன அரசின் செய்தி தொடர்பாளர் யூசுப் அல்-மஹமூத் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,தெரிவித்துள்ளார்.
இதேவேளை இஸ்ரேல் இராணுவம் நடத்திய இன்றைய தாக்குதலுக்கு உள்ளானவர்களுடன் சேர்த்து கடந்த ஒருமாதத்துக்குள் நூற்றுக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளதோடு , பல நூற்றுக்கணக்கானவர்களும் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.