பா.ஜ.க பிரமுகர் கடை மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு!

திருப்பூர்-தாராபுரம் ரோடு பகுதியை சேர்ந்தவர் சிவா என்கிற ரன்னிங் சிவா (35). பா.ஜனதா பிரமுகரான இவர் ரன்னிங் டிரேடர் என்ற பெயரில் காங்கயம் கிராஸ் ரோட்டில் பனியன் நிறுவனத்துக்கு தேவையான ஆயில், எந்திர உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார்.

வழக்கம் போல் நேற்று இரவு வியாபாரம் முடிந்து ரன்னிங் சிவா வீட்டிற்கு சென்றுவிட்டார். இன்று அதிகாலை 3.30 மணியளவில் முகமூடி அணிந்த 2 பேர் வந்தனர். அவர்கள் திடீரென ரன்னிங் சிவாவின் கடையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதைப்பார்த்த பக்கத்து கடையில் வேலைப்பார்க்கும் ஒரு நபர் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பொதுமக்கள் உதவியுடன் கடையில் எரிந்து கொண்டு இருந்த தீயை அணைத்தனர். ஆனாலும் கடையில் இருந்த ஆயில், டி.வி., மற்றும் எந்திர உதிரி பாகங்கள் எரிந்து நாசமானது.

சரியான நேரத்தில் தீயணைக்கப்பட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து திருப்பூர் தெற்கு போலீசார், பக்கத்து கடையில் இருந்தவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் பா.ஜனதா பிரமுகரின் கடைக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த முகமூடி அணிந்து வந்த நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டு இருக்கும் கண்காணிப்பு காமிராக்களில் அவர்களது உருவம் சிக்கியுள்ளதா? என்றும் சோதனை நடத்தி வருகிறார்கள்.

கடைகட்சிகண்காணிப்புகெமராதீ.பா.ஜ.கபிரமுகர்பெட்ரோல்போலீஸ்விசாரணை
Comments (0)
Add Comment