ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நாளை காலை 10 மணிக்கு, ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்பார் என்று ஐ.தே.க. வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்நிலையில் புதிய அமைச்சர்களின் பதவியேற்பு நாளைமறுதினம் இடம்பெறலாம் எனவும் எதிர்பாார்க்கப்படுகின்றது.
அதற்காக நேற்றிரவு அலரி மாளிகையில் ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சரவையில் இடம்பெறவுள்ள அமைச்சர்களின் பட்டியலைத் தயாரிக்கும் பணி இடம்பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட ஐ.தே.க. தலைவர்களும், ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களும் இது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தவகையில் அமைச்சர்களின் பட்டியலை இன்று ஜனாதிபதியிடம் ரணில் விக்கிரமசிங்க கையளிப்பார் என்றும் ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை 19 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைய அமைச்சர்களாக 30 பேரையும், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களாக 45 பேரையும் நியமிக்க முடியும்.
மேலும் குறித்த அமைச்சரவையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 6 பேரும் இடம்பெறும் வாய்ப்புகள் இருக்கின்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.