இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள ரூ.2,000, ரூ.500 நோட்டுகளில் பன்னாட்டு எண் வடிவத்துடன், தேவநாகரி வடிவத்திலும் எண்கள் அச்சிடப்பட்டுள்ளன.
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல்முறையாக ரூபாய் நோட்டுகளில் தேவநாகரி எண்கள் அச்சிடப்பட்டுள்ளன. எந்தவித முன்னறிவிப்புமின்றி மத்திய அரசு தன்னிச்சையாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
சுதந்திரத்துக்கு முன்பு இந்திய அரசியலமைப்பு நிர்ணய அவையில் நடைபெற்ற விவாதத்தில் வங்கி, அறிவியல், தொழில்நுட்பத்துறை உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு பன்னாட்டு எண் வடிவத்தை பயன்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதேசமயம், அரசியலமைப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டு 15 ஆண்டுகள் வரை தேவநாகரி எண்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும் அந்த ஆண்டுகளுக்குப் பிறகு தேவநாகரி எண்களைப் பயன்படுத்த வேண்டும் என்றால் நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
கடந்த 50 ஆண்டுகளில் அத்தகைய சட்டம் எதுவும் கொண்டுவரப்படாத நிலையில், ரூ.2,000, ரூ.500 நோட்டுகளில் தேவநாகரி எண்கள் அச்சிடப்பட்டிருப்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரான நடவடிக்கையாகும்.
ரூபாய் நோட்டுகளுக்கு எந்த விதத்திலும் சம்பந்தப்படாத தூய்மை இந்தியா திட்டத்தின் இலச்சினையும் புதிய பணத்தாள்களில் பொறிக்கப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கிதான் வெளியிடுகிறது என்ற போதிலும், மத்திய அரசின் ஆதிக்கமே ஓங்கி நிற்கிறது என்பதற்கு இதுவே சாட்சியாகும்.
எனவே, புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதை நிறுத்தி, தேவநாகரி எழுத்துகளும், தூய்மை இந்தியா இலச்சினையும் நீக்கப்பட்ட நோட்டுகளை அச்சிட்டு வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார்.