புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த வலியுறுத்தல்!

புதுச்சேரியில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் முன்வராத நிலையில் அரசு நிர்வாகம் ஸ்தம்பித்திருப்பதால், குடியரசுத் தலைவர் ஆட்சியை உடனடியாக அமல்படுத்தவேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்க காரைக்கால் பிரிவுத் தலைவர் பேராசிரியர் எஸ்.ஆனந்த்குமார் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது :  தமிழகம், புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம், கேரள ஆகிய மாநிலங்களில்  தேர்தல் நடத்தப்பட்டு, ஒரே நாளில் வாக்கு எண்ணிக்கை முடிக்கப்பட்டது. புதுச்சேரி தவிர மற்ற பெரிய மாநிலங்களில் ஆட்சி அமைக்கப்பட்டுவிட்டது.

கடந்த 5 ஆண்டுகள் ரங்கசாமி ஆட்சியின் அவலத்தால் மக்கள் அடைந்த பாதிப்பையொட்டி, காங்கிரஸ் அரசு அமைய புதுச்சேரி மாநில மக்கள் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் முதல்வர் தேர்ந்தெடுப்பதில் முன்னாள் மத்திய அமைச்சர் வி.நாராயணசாமிக்கும், பிரதேச காங்கிரஸ் தலைவர் ஆ.நமச்சிவாயத்திற்குமிடையே போட்டி நிலவுவதால், தெளிவான நிலைக்கு காங்கிரஸ் கட்சியால் வரமுடியவில்லை.

மேலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த கடந்த 3 மாதங்களாக புதுச்சேரி, காரைக்கால், மாஹே, யேனாம் பிராந்தியங்களில் அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து உள்ளது. எந்த நடவடிக்கைகளும் இல்லை. தொலைதூர பிராந்தியமான காரைக்கால் நிர்வாக செயல்பாடுகள் மங்கி காட்சியளிக்கிறது.   அரசு அமைந்தால், நிர்வாகம் இயல்பு நிலைக்கு வந்துவிடுமென கருதப்பட்ட நிலையில், காங்கிரஸாரின் போட்டி செயல்பாடுகளால் மக்கள் துன்பப்படுகின்றனர்.

அண்டை மாநிலமான தமிழகத்தில் அரசு அமைந்து, நிர்வாகங்கள் செயல்படத் தொடங்கிவிட்டன. ஆனால் சிறிய மாநிலமான புதுச்சேரி மக்களை காங்கிஸார் ஏளனப்படுத்திவிட்டனர். காங்கிரஸ் கட்சி மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்தே வாக்களித்தனர். ஆனால் அவர்களது நம்பிக்கையை காங்கிரஸôர் சிதைத்துவிட்டனர்.

புதுச்சேரி மக்களுக்கு இப்போதைய தேவை அரசு நிர்வாகம் செயல்பட வேண்டுமென்பதே. எனவே புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை உடனடியாக அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஒருவேளை காங்கிரஸார், தாங்கள் ஆட்சி அமைக்க முன்வந்தால், துணை நிலை ஆளுநர் முன்னிலையில் ஆளும் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் தங்களது தெளிவான முடிவை உறுதியாக தெரிவிக்கவேண்டும். ஆட்சி அமைக்கப்பட்டவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி உறுதிப்பாட்டை வெளிப்படுத்தவேண்டும்  என அதில் கூறப்பட்டுள்ளது.

அரசு நிர்வாகம்குடியரசுத் தலைவர் ஆட்சிநம்பிக்கை வாக்கெடுப்புபுதுச்சேரி
Comments (0)
Add Comment