சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அந்த பொறுப்பில் நீதிபதி சோமராஜூ நியமிக்கப்பட்டுள்ளார். சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பொறுப்பில் உள்ள சோமராஜுக்கு கூடுதலாக இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஊழல் தடுப்பு கண்காணிப்பு நீதிமன்றப் பதிவாளராக இருந்த மைக்கேல் டி குன்ஹா மீண்டும் அந்த பொறுப்பிற்கே நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் 27 – ம் தேதி தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்திருந்தார். அவருடன் குற்றம்சாட்டப்பட்டிருந்த சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் தலா 10 கோடி ரூபாயும் அபராதமும் விதித்து மைக்கேல் குன்ஹா தீர்ப்பளித்திருந்தார். இந்த தீர்ப்பு அரசியல் மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அரசியல் மட்டத்திலும் பொது மக்கள் மத்தியிலும் பெருமளவில் கவனத்தை ஈர்த்த குன்ஹா தற்போது ஊழல் தடுப்பு கண்காணிப்பு நீதிமன்றப் பதிவாளர் பணிக்கு திரும்பியுள்ளார்.