பெண்களே பணியாற்றும் வாக்குச் சாவடிகள்

சென்னையில் பெண்களே பணியாற்றும் 16 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் அறிவிப்பினை தேர்தல் கமிஷன் நேற்று முன்தினம் வெளியிட்டது. இதைத்தொடர்ந்து 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. இதில் தேர்தல் பணிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகளின் பணிகள் என்னென்ன என்பன பற்றி ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்த தேர்தலில் முதல் முறையாக மாதிரி வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. அதன்படி பெண் அதிகாரிகள், ஊழியர்களே பணிபுரியும் வாக்குச்சாவடிகள் ஒரு தொகுதிக்கு ஒன்று வீதம் தமிழ்நாடு முழுவதும் 234 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. இதில் தேர்தல் பதிவு அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள், தேர்தல் பார்வையாளர்கள், போலீசார் என அனைவரும் பெண்களாக நியமிக்கப்படுவார்கள். பெண்கள் பணியாற்றும் வாக்குச்சாவடிகளை தேர்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த தேர்தலின் போது பெண்கள் வாக்குப்பதிவு சதவீதம் எங்கு குறைவாக பதிவானதோ அந்த வாக்குச்சாவடிகள் பெண்கள் பணியாற்றும் வாக்குச்சாவடிகளாக மாற்றப்படுகிறது. இதன் மூலம் பெண்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டுவார்கள். ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிக்கும் என்பதால் பெண்கள் பணியாற்றும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. பெண்கள் பணியாற்றும் வாக்குச்சாவடிகளில் அரசியல் கட்சிகளின் ஏஜெண்டுகளையும் பெண்களையே நியமிக்குமாறு கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் வேண்டுகோள் விடுத்துள்ளது. சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் தலா ஒன்று வீதம் 16 பெண்கள் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது.

இதற்கான வாக்குச்சாவடிகள் தேர்வு செய்யும் பணி நடைபெறுகிறது. கடந்த தேர்தல்களின் போது கொளத்தூர், நுங்கம்பாக்கம், கிண்டி, அடையார் ஆகிய இடங்களில் குளிர்சாதன வசதியுடன் கூடிய மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு ஓட்டுப்போட வரும் வாக்காளர்களுக்கு மோரும் வழங்கப்பட்டது.

சென்னைதமிழகம்பணியாற்றல்பெண்கள்வாக்குச்சாவடி
Comments (0)
Add Comment