பெண்கள் சிறைச்சாலைகளில் அடிப்படை வசதி: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

பெண்கள் சிறைச்சாலைகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 இது தொடர்பாக உயர் நீதிமன்றம் தானாகவே முன் வந்து தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி சிவஞானம் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணையக்குழுவின் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், சென்னையைப் போலவே திருச்சி, திருநெல்வேலி மற்றும் திருவாரூரில் இருக்கும் பெண்கள் சிறைகளில் போதிய கழிப்பறை, பார்வையாளர் அறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லை என ஆய்வில் தெரியவந்ததாக கூறப்பட்டுள்ளது.

இதனால் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மகளிருக்கான சிறைகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து 4 வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

தமிழகத்தில் உள்ள பெண்கள் சிறைகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என வெளியான செய்திகளை அடிப்படையாக வைத்து, உயர் நீதிமன்றம் தானாக முன் வந்து விசாரணை நடத்தியது.

அடிப்படை வசதிஉத்தரவுசிறைச்சாலைசென்னை உயர் நீதிமன்றம்தமிழக அரசுபெண்கள்மனு தாக்கல்
Comments (0)
Add Comment