ஆப்கானிஸ்தானில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போருக்கு தீர்வு காண அமைதிப் பேச்சுவார்த்தையில் தலிபான்கள் பங்கேற்க வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் அரசு படைக்கும் தலிபான்களுக்கும் இடையே சுமார் 16 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.
கடந்த 2001-ம் ஆண்டில் ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்த அமெரிக்கா, அங்கு தலிபான்களின் ஆட்சியை அகற்றியது.
ஆப்கானிஸ்தானில் நாட்டில் மூன்றில் இரண்டு பங்கு அரசு கட்டுப்பாட்டிலும் ஒரு பங்கு தலிபான்களின் வசமும் உள்ளன.
இநநிலையில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி ஆயுதங்களைக் கைவிட்டால் தலிபான் அமைப்பை அரசியல் கட்சியாக ஏற்றுக்கொள்ளத் தயார் என்று அறிவித்தார்.
ஆனால் தலிபான்கள் தரப்பில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுதொடர்பில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைவர் காரல் ஜன் கஸ்டப் வான் ஓஸ்டோரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில், அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க தலிபான்கள் விருப்பம் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது எனினும், அந்த அமைப்பு நிபந்தனையற்ற வகையில் அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இந்த பேச்சு வார்த்தையின் மூலம் மட்டுமே ஆப்கானிஸ்தானில் நிரந்தர அரசியல் தீர்வை எட்ட முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.