முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் கைது செய்யப்பட்டு, 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் தன்னை விடுவிக்க வேண்டி, தமிழக கவர்னருக்கு சமீபத்தில் கருணை மனு அனுப்பினார்.
அந்த மனுவை பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள், தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்–அமைச்சர் பிரிவில் நேற்று கொடுத்தார். பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:– பேரறிவாளனின் விடுதலை தொடர்பாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே உறுதி அளித்திருந்தார். சில சட்டச் சிக்கல்களால் அவரால் விடுதலை ஆக முடியவில்லை.
அரசியல் அமைப்பின் 161–ம் சட்டப் பிரிவை பயன்படுத்தி மாநில அரசே விடுதலைக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று கருணை மனுவில் கூறப்பட்டு இருக்கிறது. மேலும், பெற்றோராகிய எங்களுக்கும் வயதாகியுள்ள நிலையையும், மருத்துவ அறிக்கைகளையும், பேரறிவாளனின் நன்னடத்தை தொடர்பான ஆதாரங்களையும் கருணை மனுவுடன் இணைத்திருக்கிறோம். பொங்கல் திருநாளில் எங்களின் மகன் எங்களுடன் இருப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.