பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதைப் போன்று பொறியியல் படிப்புக்கும் பொது நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசு தீர்மானித்து உள்ளது. மருத்துவ நுழைவுத் தேர்வை விட மோசமான இந்நுழைவுத் தேர்வு கிராமப்புற ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளை அடியோடு துடைத்தெறியும் ஆபத்து கொண்டதாகும். மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வை அறிமுகம் செய்வதன் மூலம் உயர் கல்வியை முழுக்க தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்துடன் மத்திய அரசு செயல்படுகிறது.
அதன் ஒருகட்டமாகத் தான் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை கடந்த 2013 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்தது. உச்சநீதிமன்றத்தின் தடையால் கடந்த 3 ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த மருத்துவ நுழைவுத் தேர்வு, நடப்பாண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகள் தவிர மீதமுள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் நடைமுறைக்கு வந்து விட்டது. அடுத்த ஆண்டு முதல் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் நீட்டிக்கப்ப9ட உள்ளது.
மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வை வெற்றிகரமாக அறிமுகம் செய்து விட்ட மத்திய அரசு அடுத்தக் கட்டமாக பொறியியல் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வை அறிமுகம் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது. இந்திய தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்கள், தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், இந்திய தகவல்தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் முதன்மை கூட்டு நுழைவுத் தேர்வை பொறியியல் படிப்புக்கும் நீட்டிக்க திட்டமிட்டிருப்பதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின்தலைவர் அனில் சகஸ்ரபுதே தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து பல்வேறு தரப்பினருடன் பேச்சு நடத்தப்பட்டு வருவதாக சகஸ்ரபுதே கூறியுள்ள போதிலும், அடுத்த கல்வியாண்டு முதல் நாடு முழுவதும் பொறியியல் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிகிறது. பொறியியல் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தினாலும், தமிழகப் பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் அண்ணா பல்கலைக் கழகத்தால் ஒற்றைச்சாளர முறையில் தான் நிரப்பப்படும். அப்போது முதன்மை கூட்டு நுழைவுத் தேர்வு மதிப்பெண் தான் அடிப்படையாகக் கொள்ளப்படும் என்பதால் தமிழகத்தில் உள்ள முன்னணி அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களை சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட மாணவர்களே முற்றிலுமாக கைப்பற்றும் நிலை ஏற்படும்.
மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் தரமற்ற கல்லூரிகளில் மட்டுமே சேரும் நிலை உருவாகும். இதற்கெல்லாம் மேலாக கல்வி என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும். மருத்துவம் பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை விதிகளை மத்திய அரசு உருவாக்குவது மாநில அரசின் அதிகார வரம்பிற்குள் தலையிடும் செயலாகும். எனவே பொறியியல் படிப்புக்கு தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றாக குரல் கொடுத்து பொதுநுழைவுத் தேர்வை தடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.