போலீஸ் நிலையத்தில் சாராயக்கடை வைத்தால் சிறப்பாக இருக்கும்!

தமிழ்நாடு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கும்பகோணத்தில் என்னுடைய கொடும்பாவியை எரித்தனர். பொதுவாக கொடும்பாவி எரித்தால் சம்மந்தபட்டவர்களின் ஆயுள்காலம் நீடிக்கும் என்பார்கள் எனவே என்னுடைய கொடும்பாவி எரித்த அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தக் கொள்கிறேன்.

மோடி அரசு தனிமனித சுதந்திரத்தில் தலையிடுகிறது. மாட்டு இறைச்சி இந்தியா முழுவதும் உள்ள பொதுவான ஒரு உணவு. கொடுங்கோல் ஆட்சி மற்றும் சர்வாதிகார ஆட்சியில் கூட உணவு முறையில் தலையிடுவதில்லை. ஆனால் மோடி அரசு செய்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இது போன்று தனி மனித சுதந்திரம் பாதிக்கப்படுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

பாலில் கலப்படம் என்பது ஜெயலலிதா ஆட்சியிலேயே விஸ்வரூபம் எடுத்தது. முதலில் ஆவின் பால் தரம் நிறைந்ததா? மக்கள் உயிருக்கு பாதுகாப்பானதா? என்று தகுந்த நிபுணர்களை கொண்டு ஆராய்ந்து அதற்கான அறிக்கை விடவேண்டும். தனியார் பால் நிறுவனங்களில் பணம் வாங்குவதற்காக தான் அமைச்சர் தனியார் பாலில் கலப்படம் என்று அறிவித்தார். அ.தி.மு.க.அரசின் 100 நாள் சாதனை என்பது ஏன் 6 ஆண்டு சாதனை கூட பூஜ்ஜூயம் தான். இதை நினைத்தால் வேதனை அளிக்கிறது. அ.தி.மு.க. கட்சியினர் மோடி காலில் விழுவதற்கே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது. பாரதீய ஜனதாவின் பினாமி அரசாக அ.தி.மு.க. மாறுகிறது.

ரஜினிகாந்த் என்பவர் பொதுவானவர். அவரை அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பிடிக்கும். ஆனால் அவர் அரசியலுக்குள் புகுந்து சிறு வட்டத்துக்குள் சென்று விட கூடாது. பாரதீய ஜனதா கொடுத்த வாக்குறுதிகளில் இந்த 3 வருடத்தில் எதையும் நிறைவேற்றவில்லை. கருப்பு பணம் ஒழிப்பு என்று எடுத்த நடவடிக்கை மக்களை பாதித்து இருந்தும் இப்போது தான் கருப்பு பணம் அதிகமாக புழக்கத்தில் இருந்து வருகிறது. குடியரசு தலைவர் வேட்பாளரை சோனியா காந்தி நிறுத்தினால் பாரதீய ஜனதா அவரை ஆதரிக்க வேண்டும்.

மேட்டூர் அணையை தூர்வார வேண்டும் என்றால் தண்ணீர் இல்லாத போது தூர் வார வேண்டும். தண்ணீர் உள்ள போது தூர்வாரும் செயல் அரசு பணத்தை வீணடிப்பதாகும். டாஸ்மாக் கடையை முழுமையாக எடுத்துவிட வேண்டும். இல்லை அதற்கு பாதுகாப்பு வேண்டும் என்றால் காவல் நிலையத்திற்குள் டாஸ்மாக்கை நடத்த வேண்டும். அப்போது தான் அது பாதுகாப்பாக இருக்கும். கள்ளசாராயம் காய்ச்சுவது அ.தி.மு.க.வை சேர்ந்த மந்திரி தான் எனவே கள்ளச்சாராயம் காய்ச்சுவதை அ.தி.மு.க.மந்திரிகள் கைவிட வேண்டும். அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடத்திய சோதனை கண்துடைப்பா? அல்லது உண்மையாகவே நடவடிக்கை எடுப்பார்களா என்று சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்.

முதல்-அமைச்சராக உள்ள எடப்பாடி முதல்-அமைச்சருக்கே தகுதி இல்லாதவர். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் தன்னுடைய பங்காளி 2 பேரை கொன்ற வழக்கு அவர் மீது உள்ளது. தற்போது ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் என்பவர் கொல்லப்பட்டு இருக்கிறார். அவரும் எடப்பாடிக்கு பங்காளி முறைதான். ஆகவே எடப்பாடி பங்காளிகள் அனைவரும் இப்போது பயத்தில் இருக்கின்றனர்.

கருணாநிதியின் வைரவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். அவர் கால் பதித்த எல்லாதுறையிலும் சாதனை மிக்கவராக உள்ளார். எனவே அவருக்கு விழா கொண்டாடுவது சால சிறந்தது. காவிரியை பொறுத்த வகையில் கர்நாடகாவுடன் சுமுக உறவு இருந்தால் எப்போதோ தமிழகத்திற்கு தண்ணீர் கிடைத்திற்கும். காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி போன்றவர்கள் காலத்தில் கர்நாடகாவுடன் சுமுக உறவு இருந்ததால் தான் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைத்தது. ஆனால் இப்போது சுமுக உறவு இல்லை என்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்க வில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இளங்கோவன்கள்ளச்சாராயம்சாராயம்டாஸ்க்மார்போலீஸ்
Comments (0)
Add Comment