முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மீண்டும் ஆட்சிபீடம் ஏற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் புதிய கட்சியொன்றை உருவாக்கப்போவதாக கூறிவரும் நிலையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால, கடுந்தொனியிலான சிவப்பு சமிக்ஞையை நேற்று காண்பித்துள்ளார்.
நல்லாட்சிக்காக உருவாக்கப்பட்ட தேசிய அரசாங்கத்தின் முதலாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று தென்னிலங்கையின் மாத்தறை பகுதியில் பிரதான நிகழ்வு இடம்பெற்றது.
இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட நல்லாட்சி அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்காக பாடுபட்ட முன்னணி அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது உரைநிகழ்த்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிப்போர் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டால் ஏனையவர்களை விடவும் கடுமையான தண்டனை அவர்களுக்கு வழங்கப்படும் என்றும் எச்சரித்தார்.
“எதிர்வரும் 5 வருடங்களுக்கு நல்லாட்சி அரசாங்கம் கொண்டுசெல்லப்படுவதோடு, அதற்கடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதுபற்றி தெளிவான முடிவொன்றில் நான் இருக்கின்றேன்.
ஊழல்,மோசடி களவு, அரச சொத்து முறைகேடான பாவனை என்பவற்றிற்கு இராஜ கிரீடம் சூடியவர்கள் இந்த நாட்டின் தலைவராக மீண்டும் ஆட்சிசெய்வதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். எங்களை வீட்டுக்கு அனுப்புவதாக தெரிவிப்போர் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கவிருப்பதாகவும் கூறுகின்றனர்.
புதிய கட்சியை அவர்கள் ஆரம்பிப்பதையும் பார்க்கத்தான் போகின்றோம். கடந்த வருடம் ஜனவரி 8ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் தினத்தன்று அவர்கள் செய்த ஊழல், மோசடி என்பவற்றை வெளிகொணர்ந்தோம்.
இந்த நிலையில் அவர்கள் புதிய கட்சியொன்றை உருவாக்கினால் இன்றுவரை வெளிப்படுத்தாத விடயங்கள், இரகசியங்கள் என மூடிமறைக்கப்பட்ட பலவற்றையும் வெளியிட்டு, அவர்களது அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பதை விடவும் நடுத்தெருவுக்கு அவர்களைக் கொண்டுவரவும் தயங்கமாட்டோம்”)
இதேவேளை தற்போதைய அரசாங்கம் சர்வதேசத்திடம் நாட்டையும், மக்களையும் காட்டிக்கொடுத்துவிட்டதாக குற்றம்சாட்டும் தரப்பினரே சர்வதேச ரீதியில் எழுந்த சவால்களுக்கு முகம்கொடுக்காது நாட்டை காட்டிக்கொடுத்தாக மைத்ரிபால குற்றம்சாட்டியுள்ளார்,
“சில தேசப்பற்றாளர்கள் கூறுகின்றனர் இந்த அரசாங்கம் தேசத்துரோகம் இழைக்கின்றதாம். மற்றுமொரு தேசப்பற்றாளர்கள் கூறுகின்றனர். இந்த அரசாங்கம் நாட்டின் தேசிய பாதுகாப்பை சீர்குழைப்பதாக குற்றம்சாட்டுகின்றனர்.
அதேபோல் இன்னும் சிலர், நாடு குறித்தும், நாட்டு மக்கள் குறித்தும் அக்கறை இல்லாதவர்களே இந்த அரசாங்கத்தில் இருப்பதாக கூறுகின்றனர். ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் குற்றம்சுமத்தும் தரப்பினர் மத்தியிலேயே இருக்கின்றது என்பதை கூறிக்கொள்கின்றேன்.
அதுமாத்திரமன்றி இந்த போலி தேசப்பற்றாளர்களை விட நாம் நாட்டை நேசிக்கின்றோம். மக்களை நேசிக்கின்றோம். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களுக்கு முகம்கொடுக்க அஞ்சி கடந்த ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கு சென்றனர்.
ஆனால் நாம் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களுக்கு வெற்றிகரமாக முகம்கொடுத்து, அவற்றின் கடுமையை நீக்கி, நாட்டுக்குப் பாதகமான யோசனைகளை முற்றாக அகற்றினோம்.
அது மாத்திரமன்றி எமக்கு முகம்கொடுக்கக் கூடிய எம்மால் நடைமுறைப்படுத்தக்கூடிய வகையில் குறித்தத் தீர்மானத்தின் உள்ளடக்கங்களை மாற்றியமைத்தே அதனை நிறைவேற்றச் செய்தோம்.
அதன்ஊடாக நாட்டின் தேசிய பாதுகாப்பையும், இராணுவம் உட்பட அரச படையினரையும் பாதுகாத்து, நாட்டின் ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் மேலும் வலுப்படுத்தியுள்ளோம்.
இவ்வாறு எமக்கு சாதகமாக ஜெனீவாத் தீர்மானத்தை மாற்றியமைத்து குறித்த யோசனைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கும் போது, இந்த அரசாங்கம் நாட்டை காட்டிக்கொடுத்து இரண்டு துண்டுகளாக நாட்டை பிரித்து நாட்டின் தேசிய பாதுகாப்பையும், இராணுவத்தையும் பழிகொடுக்கும் துரோகத்தில் ஈடுபட்டுள்ளதாக போலி தேசப்பற்றாளர்கள் கூக்குரலிடுகின்றனர்.
அதேபோல் மேற்குலக நாடுகளுக்கு இந்த அரசாங்கம் அடிபணிந்து சேவகம் செய்து வருவதாக குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் இந்த அரசாங்கம் மேற்குலக நாடுகளுக்கு மட்டுமல்ல அது கிழக்காகவோ, மேற்காகவோ வடக்காகவோ இருந்தாலும் எந்தவொரு தரப்பிற்கும் அடிணியாது.
எம்மை வெளிநாடுகள் ஆட்டுவிக்கவும் இடமளிக்க மாட்டோம். நாம் மிகவும் சுதந்திரமாக செயற்படுவோம். சர்வதேச சமூகத்தின் தலையீடுகளுக்கு இடமளிக்க மாட்டோம் என்பதை நாட்டு மக்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன். – என்று கூறினார்.