மக்கள் ஜனநாயக கட்சி-பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமையும் வாய்ப்பு

காஷ்மீரில் ஆட்சி அமைப்பது குறித்து கவர்னரை சந்தித்து ஆலோசனை நடத்திய மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா, பா.ஜனதாவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்பது பற்றி அவர் சூசகமாக தெரிவித்துள்ளார்.

87 உறுப்பினர்களை கொண்ட காஷ்மீர் மாநிலத்துக்கு அண்மையில் நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. மக்கள் ஜனநாயக கட்சிக்கு 28 இடங்களும், பா.ஜனதாவுக்கு 25 தொகுதிகளும், தேசிய மாநாட்டு கட்சிக்கு 15 இடங்களும், காங்கிரசுக்கு 12 தொகுதிகளும் கிடைத்தன. சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 7 இடங்களில் வெற்றி பெற்றன. இதனால் மாநிலத்தில் ‘தொங்கு’ சட்டசபை ஏற்பட்டுள்ளது.  இந்தநிலையில் மாநிலத்தில் ஆட்சி அமைக்க வருமாறு மக்கள் ஜனநாயக கட்சிக்கும், பா.ஜனதாவுக்கும் மாநில கவர்னர் என்.என். வோரா அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், தேசிய மாநாட்டு கட்சியும், காங்கிரசும், பா.ஜனதாவின் ஆட்சி காஷ்மீரில் அமைவதை விரும்பவில்லை. மதச்சார்பற்ற ஆட்சி அமைவதற்காக மக்கள் ஜனநாயக கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக இந்த 2 கட்சிகளும் வெளிப்படையாக அறிவித்தன. இதனையடுத்து மெகா கூட்டணி அமைய உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியது.

இந்நிலையில் கவர்னரின் அழைப்பின் பேரில், பா.ஜனதா தலைவர்கள், கவர்னர் என்.என்.வோராவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். ஆட்சி அமைப்பதற்கான திட்டத்தை கவர்னரிடம் சமர்ப்பிக்கப்போவதாக கூறினர். மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி இன்று ஜம்முவில் கவர்னர் என்.என்.வோராவை சந்தித்தார். ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். பிறகு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், பா.ஜனதாவுடன் கைகோர்க்க தயாராக இருப்பதை சூசகமாக தெரிவித்தார்.

மெகபூபா பேசுகையில், கவர்னருடனான எனது சந்திப்பு, சாதாரணமானது. தேர்தலில் குழப்பமான தீர்ப்பு வெளியாகி உள்ளதால், இச்சந்திப்பு நடந்துள்ளது. நாங்கள் அரசு அமைப்பதற்கு அவசரப்படவில்லை. எந்தகட்சி ஆட்சி அமைப்பதாக இருந்தாலும், அது மக்கள் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும். இணக்கமான கொள்கையை பின்பற்றுவதாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், எந்த கூட்டணி அமைந்தாலும் பயனில்லை.

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் எங்கள் கட்சியும், ஜம்மு பகுதியில் பா.ஜனதாவும் பெரும்பான்மை இடங்களைப் பிடித்துள்ளன. இந்த மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும். அரசு அமைக்க வேண்டுமே என்பதற்காக, பெரும்பான்மையை திரட்ட மாட்டோம். தேர்தல் முடிவுகள், தேசிய கட்சிகளுக்கு சவாலாகவும், வாய்ப்பாகவும் அமைந்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாட்டில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. குறிப்பாக, பிரதமர் மோடிக்கு பெரிய பொறுப்பு ஏற்றப்பட்டுள்ளது.

காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பாக அவர் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டால், காஷ்மீர், உலகத்துக்கே முன்னுதாரணமான மாநிலமாக திகழும். நேரு காலத்தில் இருந்தே எல்லா பிரதமர்களுக்கும் காஷ்மீர், சவாலாகவே இருக்கிறது. ஆனால்,
வாஜ்பாய் பின்பற்றிய அரசியல் நடவடிக்கைகளை கையில் எடுக்காவிட்டால், அமைதி சாத்தியம் இல்லை. அவர் பிரதமராக இருந்தபோது, ஹூரியத் அமைப்புடனும், பாகிஸ்தானுடனும் பேச்சுவார்த்தையை தொடங்கினார். பொருளாதார உதவியை அறிவித்தார். ஆனால், பின்னர் வந்த காங்கிரஸ் அரசு, அதை நிறுத்திவிட்டது. அமைதி ஏற்பட்டால்தான், வளர்ச்சியும் ஏற்படும். என்றார்.

பா.ஜனதா வரவேற்பு

மெகபூபாவின் இந்த கருத்துகளை பா.ஜனதா வரவேற்றுள்ளது. இதுபற்றி அக்கட்சியின் பொதுச்செயலாளர் ராம் மாதவ் கூறுகையில், ‘மெகபூபாவின் கருத்தை பாராட்டுகிறோம். அவரது கட்சியுடன் முறைப்படியான பேச்சுவார்த்தைக்காக காத்திருக்கிறோம்’ என்றார்.

மெகபூபாவின் கருத்துகள், காஷ்மீரில் இழுபறிக்கு முடிவு கட்ட உதவும் என்று பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்தன. எனவே, மக்கள் ஜனநாயக கட்சி-பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமையும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

ஆட்சிஆலோசனைஇடம்கட்சிகவர்னர்காங்கிரஸ்காஷ்மீர்கூட்டணிசட்டசபைசந்திப்புதேர்தல்பாஜகமக்கள் ஜனநாயகம்மாநிலம்மெகாபூபா
Comments (0)
Add Comment