‘மக்கள் நல கூட்டணியில் இருந்து த.மா.கா. வெளியேறியது’, என்றும் ‘சட்டசபை தேர்தலோடு தொகுதி உடன்பாடும் முடிந்தது’, என்றும் சென்னையில் ஜி.கே.வாசன் தெரிவித்தார். நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க.-மக்கள் நல கூட்டணி-த.மா.கா. படுதோல்வியை சந்தித்தது. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாததால் அக்கூட்டணியிலேயே புகைச்சல் நீடித்து வந்தது. இதனால் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நல கூட்டணியில் நீடிக்கலாமா? என்ற கேள்வி தே.மு.தி.க.-த.மா.கா கட்சிகள் இடையே எழுந்தது.
இதனைத் தொடர்ந்து தே.மு.தி.க. மற்றும் த.மா.கா. கட்சிகள் சார்பில் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டங்களில், ‘‘தேர்தல் தோல்விக்கு மக்கள் நல கூட்டணியோடு இணைந்ததே காரணம்’’, என்று பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் தெரிவித்து இருந்தனர். இதனால் எந்த நேரமும் மக்கள் நல கூட்டணியில் இருந்து தே.மு.தி.க.-த.மா.கா. கட்சிகள் விலகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. பரபரப்பான இந்த சூழ்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நலனுக்காக ஒரு மாற்று அணி அவசியம் என்பதை உணர்ந்து தான், மக்கள் நல கூட்டணியோடு தேர்தலை சந்தித்தோம்.
மக்கள் நல கூட்டணி என்பது ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் எனும் 4 கட்சிகள் கொண்ட கூட்டணி ஆகும். மரியாதைக்குரிய அந்த 4 கட்சிகளின் தலைவர்களும் த.மா.கா. அலுவலகத்துக்கு கடந்த ஜனவரி மாதம் வந்து, என்னை கூட்டணிக்கு வருமாறு அழைத்தனர். மக் கள் நல கூட்டணியோடு, தே.மு.தி.க. இணைந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் மக்கள் நல கூட்டணியோடு தேர்தலை சந்திப்பதற்கான தொகுதி உடன்பாட்டில் நாங்கள் கையெழுத்திட்டோம். அப்போது இருந்தே தே.மு.தி.க.-மக்கள் நல கூட்டணி-த.மா.கா. என்ற பெயரில் கூட்டணி அழைக்கப்பட்டது. ஒதுக்கப்பட்ட 26 தொகுதிகளில் நின்று த.மா.கா. தேர்தலை சந்தித்தது.
தே.மு.தி.க.-மக்கள் நல கூட்டணியில் தொகுதி உடன்பாட்டில் மட்டுமே நாங்கள் ஒப்பந்தம் போட்டு உள்ளோம். மற்றபடி கூட்டணியில் நாங்கள் அங்கம் வகிக்கவில்லை. அதன் காரணமாகவே தேர்தல் அறிக்கையை கூட தனித்தனியே நாங்கள் வெளியிட்டுக்கொண்டோம். தேர்தல் முடிந்ததால் மக்கள் நல கூட்டணியோடு இருந்த தொகுதி உடன்பாட்டு பங்கீடும் முடிந்துவிட்டது. தற்போது உள்ள சூழ்நிலையில் மக்கள் நல கூட்டணியில், த.மா.கா. இல்லை. கூட்டணியில் தான் இல்லையே தவிர கட்சி தலைவர்கள் மேல் மரியாதை வைத்து உள்ளோம். அதனால் தான் எங்கள் கட்சியின் செயற்குழு கூட்டத்திலேயே மக்கள் நல கூட்டணி தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானமும் இயற்றினோம். உதாரணமாக வருகிற 24-ந்தேதி ம.தி.மு.க. சார்பில் நடைபெறும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு, எனக்கு விடுக்கப்பட்ட அழைப்புக்கு, ‘வருவேன்’ என்பதை பதிலாக கூறியுள்ளேன்.
இனி த.மா.கா.வை பலப்படுத்த, நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் மற்றும் 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் நல்ல நிலையை எட்டவேண்டும் என்பதன் அடிப்படையில் கட்சி நிர்வாகிகள்-தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். ‘தனித்து நின்று வெற்றி’, என்ற நிலைக்கு த.மா.கா.வை கொண்டு செல்ல வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகவும், லட்சியமாகவும் உள்ளது. நிர்வாகிகளின் அனைத்து கருத்துகளையும் ஒருமுகப்படுத்தி கட்சியின் முன்னேற்ற பாதைக்கு ஏற்ற திட்டங்களை தெரிவிக்க இருக்கிறேன். கிராம ரீதியாகவும் கட்சியை வலுப்படுத்த தயாராகிறோம். அதன் அடிப்படையில் 32 மாவட்டங்களையும் 12 மண்டலங்களாக பிரித்து சுற்றுப்பயணம் செல்ல உள்ளேன்.
ஒவ்வொரு மண்டலத்திலும் பொதுக்கூட்டங்கள் நடத்தி நிர்வாகிகள்-தொண்டர்கள் கருத்துகளை கேட்க இருக்கிறேன். நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியா? தனித்து போட்டியா? என்று பல கேள்விகளை எழுப்புகிறீர்கள். உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அதற்கான பதில் உடனடியாக தெரியவரும். கட்சி தலைமை நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கருத்து அந்த முடிவில் முக்கிய பங்கு வகிக்கும். தமிழகத்தில் 500 டாஸ்மாக் மதுக்கடைகள் அகற்றப்பட்டது மகிழ்ச்சியான, வரவேற்கத்தக்க விஷயமாகும். மதுவில்லா தமிழகம் என்பதே மக்களின் எண்ணம். அதை தமிழக அரசு நடத்தி தர வேண்டும்.
தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியான தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நலம், வயதை கருத்தில் கொண்டு சட்டசபையில் அவருக்கு தகுந்த இருக்கை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பதையும் இந்த நேரத்தில் நான் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.