மதுவிலக்கு குறித்து பொது விவாதத்துக்கு ஜெயலலிதா தயாரா? என மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். குமரி மாவட்டத்தில் தி.மு.க.– காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டா லின் திறந்த வேனில் பிரசாரம் செய்தார்.
களியக்காவிளையில் பிரசாரத்தைத் தொடங்கிய அவர் மார்த்தாண்டம், முளகு மூடு, தக்கலை, வடசேரி, ஆரல்வாய்மொழி பகுதிகளில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:– கடந்த 2011ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டு ஆட்சிக்கு வந்தார். அதன் பிறகு கடந்த 5 வருடத்தில் அவர் இந்த பகுதிக்கு வந்தாரா? உங்களது (மக்களின்) குறைகளை கேட்டாரா? அவ்வளவு ஏன் இந்த மாவட்டத்துக்காவது வந்தாரா?. இந்த மாவட்டத்தை விட்டு விடுங்கள், தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்காவது அவர் சென்றது உண்டா?. ஆனால் ஒரே ஒரு மாவட்டத்துக்கு மட்டும் அவர் சென்று வருவார்.
அது நீலகிரி மாவட்டம். அங்குள்ள கொடநாடுக்கு அவர் ஓய்வெடுக்க செல்வார். மக்களைப்பற்றி கவலைப்படாத ஜெயலலிதா, தேர்தல் வந்து விட்டதால் மக்களை காண 3 நாட்களுக்கு ஒருமுறை, 4 நாட்களுக்கு ஒருமுறை தேர்தல் பிரசார கூட்டங்களை நடத்தி வருகிறார். நான் இதே குமரி மாவட்டத்தில் இருந்துதான் நமக்கு நாமே பயணத்தை தொடங்கினேன். தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் இந்த பயணத்தை தொடர்ந்தேன். அப்போது விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள் என அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து பேசினேன்.
ஆனால் இன்று அ.தி. மு.க.வினராக இருக்கட்டும், அவர்களது வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளவர்களாகட்டும் தெம்போடும், துணிச்சலோடும் வாக்கு கேட்கும் நிலை இருக்கிறதா?. அமைச்சர்கள் எங்காவது தைரியமாக போய் மக்களை சந்தித்து ஆதரவு கேட்கும் நிலை உள்ளதா என்றால் இல்லை. திருச்சியில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா இந்த தேர்தலில் தி.மு.க. 2–வது இடத்துக்கு கூட வரமுடியாது என்று கூறியிருக்கிறார். நான் சொல்கிறேன், இந்த தேர்தலில் அ.தி.மு.க. 3–வது இடத்துக்குக்கூட வரமுடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. அமைச்சர்களையும், அ.தி.மு.க. வேட்பாளர்களையும் மக்கள் விரட்டியடிக்கும் சூழ்நிலை தமிழகத்தில் உருவாகியிருக்கிறது.
அதனால் ஜெயலலிதாவிடம் நிதானமற்ற நிலை உருவாகி இருக்கிறது. மிரண்டுபோய் பிரசார கூட்டங்களில் ஏதேதோ பேசி வருகிறார். எனவே தான் பிரசார கூட்டங்களில் பிறர் மீது பாயக்கூடிய அளவிலும், சீறக்கூடிய அளவிலும் அவருடைய பேச்சு இருக்கிறது. ஆர்.கே.நகர் தொகுதியில்கூட முதல்–அமைச்சர் வெற்றி பெறுவது சந்தேகத்துக்கு உரியது. 234 தொகுதியிலும் அ.தி.மு.க. தோல்வி அடையும். ஆனால் எப்படியாவது பணத்தைக்கொடுத்து ஓட்டுகளை வாங்கலாம் என எண்ணி அ.தி.மு.க.வினர் செயல்படுகின்றனர்.
மாவட்ட அளவில் வட்டார அளவில் பணத்தை பதுக்கி வைத்து வருகின்றனர். பூரண மதுவிலக்கை தி.மு.க. சொல்லவில்லை என்று ஜெயலலிதா கூறி உள்ளார். மதுக்கடைகளை திறந்த ஜெயலலிதாவுக்கு, மதுக்கடைகளை மூடுவோம் என்று தி.மு.க. கூறும்போது ஆத்திரம் வருகிறது, கோபம் வருகிறது. டாஸ்மாக் மூலம் அரசே மது விற்பனை செய்வதற்கான உத்தரவு போட்டவரே ஜெயலலி தாதான் என்பதை நான் ஆணித் ரமாக சொல்லிக் கொள்கிறேன்.
இதை ஜெயலலிதா துணிச்சல் இருந்தால் மறுத்துக்கூற முடியுமா? என்மீது வழக்கு போடட்டும். நான் தைரியமாக நீதிமன்றத்துக்கு வர தயாராக இருக்கிறேன். ரூ.3 ஆயிரம் கோடியாக இருந்த மதுவின் மூலமான வருமானத்தை ரூ.30 ஆயிரம் கோடியாக உயர்த்திய புண்ணியவதி ஜெயலலிதா என்று பகிரங்கமாக குற்றம் சாட்ட விரும்புகிறேன். இதுபற்றி ஒரு பொதுக்கூட்டத்தை நடத்துங்கள். விவாத மேடை நடத்துங்கள் நான் வருவதற்கு தயாராக இருக்கிறேன். ஜெயலலிதா வருவதற்கு தயாரா? ஏதோ மது விற்பனையை தி.மு.க. கொண்டு வந்தது போலவும், மதுவிலக்கு பற்றி பேச தி.மு.க.வுக்கு தகுதி இல்லை என்பது போலவும் ஜெயலலிதா பேசி வருகிறார். மக்களை பற்றி கவலைப்படாமல், சிந்திக்காமல் ஜெயலலிதா ஆட்சி செய்து வருகிறார். குடிக்கிற தண்ணீரை விற்கும் ஒரே ஆட்சி ஜெயலலிதா ஆட்சி தான். கடந்த 2006–ம் ஆண்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டபோது, ஹீரோவாக தி.மு.க. தேர்தல் அறிக்கை இருந்தது.
கலைஞர் சமீபத்தில் வெளியிட்ட 2016–ம் ஆண்டுக்கான தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோவாக வெளியிடப்பட்டு உள்ளது. சினிமாக்களில் வில்லனிடமிருந்து கதாநாயகன் தனது காதலியை காப்பாற்றுவதாக இருக்கும். அதைப்போல் தமிழகத்தை, ஜெயலலிதாவிடம் இருந்து தி.மு.க. தேர்தல் அறிக்கை என்ற கதாநாயகனால் காப்பாற்றப்பட நீங்கள் உங்களது ஆதரவை எங்களுக்குத்தர வேண்டும். அ.தி.மு.க. தேர்தல் பிரசார கூட்டத்தில் வேட்பாளர்களை கொத்தடிமைகளைப் போல நிற்க வைக்கிறார்கள்.
இங்கே, வேட்பாளர்கள் என்அருகில் சரிசமமாக எப்படி நிற்கிறார்கள் என்பதை பாருங்கள். இது சுயமரியாதை. தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா என்பதுதான் தி.மு.க.வில் உள்ள சுயமரியாதை. ஆனால் அ.தி.மு.க.வில் சுயமரியாதை பற்றி உங்களுக்கே தெரியும். விவசாயிகள் தற்கொலைக்கு குடும்ப பிரச்சினை, உடல்நிலை காரணம் என்று ஜெயலலிதா பொய் சொல்கிறார். விவசாயிகள் தற்கொலையை கொச்சைப்படுத்தி பேசி வருகிறார். ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு உள்ளது.
அவர் விடுதலையாகி விட்டாலும் கூட இன்று மேல்முறையீடு மூலம் கத்தி அவர் தலையின் மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது. 4 வருடம் ஜெயில் தண்டனை, 100 கோடி அபராதம் என்று தண்டனை ஏற்கனவே வந்தது. இப்போது உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு வழக்கு நடக்கிறது. தீர்ப்பு தேர்தலுக்கு முன்பு வருமா? பின்னர் வருமா? என்பது தெரியாது. ஆனால் தீர்ப்பு கண்டிப்பாக வரும். தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மக்கள் நல பணியாளர்கள் மீண்டும் பணி அமர்த்தப்படுவார்கள். அதற்கான தனி சட்டம் அமைக்கப்படும். தமிழகத்தில் நல்லாட்சி உருவாக்கி தர நீங்கள் அனைவரும் துணை நிற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.