மது ஒழிப்புக்கு விழிப்புனர்வு கேட்டு வழக்கு

சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் கே.பாலு தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-  தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள், வழிப்பாட்டு தலங்கள் அருகே விதிமுறைகளை மீறி மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. யார் வேண்டுமானாலும் மதுபானங்களை வாங்கிச் செல்லலாம் என்ற ரீதியில் விற்பனையும் நடந்து வருகிறது. இதனால் மதுவினால் உடல்நலம் பாதிக்கப்பட்டு இளைஞர்கள் உள்பட பலர் இறக்கிறார்கள்.  

இதுகுறித்து ஆய்வு செய்த உலக சுகாதார அமைப்பு, மது குடிக்கும் பழக்கத்தை குறைத்தல், மதுவின் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல், மது விற்பனையை கட்டுப்படுத்துதல் போன்ற பல திட்டங்களை உருவாக்கி 2014-ம் ஆண்டு அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள திட்டங்களை அமல்படுத்த ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு தமிழக அரசுக்கு கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரை பரிசீலிக்கவில்லை.  இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.  இந்த மனுவை ஏப்ரல் மாதம் விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் உலக சுகாதார அமைப்பின் அறிக்கையை அமல்படுத்துவது குறித்து ஆராய ஒரு குழுவை தமிழக அரசு உருவாக்க வேண்டும்.

அவ்வாறு செய்யவில்லை என்றால், அந்த குழுவை நாங்களே உருவாக்குவோம் என்று எச்சரித்து இருந்தனர்.  இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக உள்துறை முதன்மை செயலாளர் அபூர்வ வர்மா பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-  உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளின்படி, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 504 மதுக்கடைகளை தமிழக அரசு அகற்றி விட்டது. குடிபோதையில் வாகனங்களை ஓட்டியதாக 2013-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை 6 லட்சத்து 83 ஆயிரத்து 734 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த 3 ஆண்டுகளில், போதையில் வாகனம் ஓட்டியதாக 32,566 பேரின் மோட்டார் வாகன ஓட்டுனர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடைகளில் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்ற உத்தரவு தீவிரமாகவும், கண்டிப்புடனும் பின்பற்றப்படுகிறது.

மதுவின் தீமை குறித்து தமிழகத்தில் உள்ள 1,765 ஆரம்ப சுகாதார மையங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றன. மதுவுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை வழங்க அரசு ஆஸ்பத்திரிகளில் மறுவாழ்வு சிகிச்சை மையங்கள் செயல்படுகின்றன. மத்திய அரசின் நிதியுதவியுடன், 555 மறுவாழ்வு சிகிச்சை மையங்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் செயல்படுகின்றன.  2015-2016-ம் ஆண்டுகளில் அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள இந்த மையங்களில் 93 ஆயிரத்து 607 பேரும், மாவட்ட மனநல மருத்துவ திட்டத்தின் கீழ் 21 ஆயிரத்து 725 பேரும் சிகிச்சை பெற்றுள்ளனர். இதற்காக 2012-ம் ஆண்டு முதல், ஆண்டுக்கு ரூ.5 கோடி வரை செலவு செய்யப்பட்டு வருகிறது.  மதுவின் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. தற்போது இந்த தொகை ரூ.3 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதை தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா டாஸ்மாக் கடைகளின் பணி நேரத்தை 2 மணி நேரம் குறைத்தும், மாநிலம் முழுவதும் 500 டாஸ்மாக் மதுக்கடைகளை மூடவும் மே 24-ந் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளார். முதல்-அமைச்சரின் இந்த நடவடிக்கையினால், உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள பரிந்துரைகளை அமல்படுத்த தனியாக ஒரு குழு அமைக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.  எனவே, இந்த குழுவை அமைக்க வேண்டும் என்று ஏப்ரல் 12-ந் தேதி ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை மாற்றியமைக்க வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.  மனுதாரர் கே.பாலு, ‘தமிழகத்தில் குடிபோதைக்கு பலர் அடிமையாகி பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் தான் உலக சுகாதார அமைப்பு மது பழக்கத்துக்கு எதிராக பல திட்டங்களை உருவாக்கியுள்ளது. இந்த திட்டங்களை அமல்படுத்த ஒரு குழுவை கண்டிப்பாக அமைக்கவேண்டும். மது தொடர்பாக அரசு பல திட்டங்களை கொண்டுவந்தாலும், அவை செயல்பாட்டுக்கு வருவது இல்லை.

உதாரணத்துக்கு, மதுவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு சிகிச்சை அளிப்பதற்கு ‘15801’ என்ற இலவச தொலைபேசி எண்ணை அரசு அறிவித்துள்ளது. இந்த எண்ணில் தொடர்பு கொண்டால், பழுதடைந்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது’ என்றார்.  இதையடுத்து அந்த இலவச எண்ணை தொடர்பு கொள்ளும்படி, கோர்ட்டு அதிகாரிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அந்த அதிகாரி தன் செல்போன் மூலம் அந்த எண்ணை ‘டயல்’ செய்து, ஸ்பீக்கரை ஆன் செய்தார். அப்போது, இந்த எண் பழுதடைந்துள்ளது என்று அறிவிப்பு வெளியானது. இதைக் கேட்டு கோர்ட்டில் இருந்த அனைவரும் சிரித்தனர்.  பின்னர் நீதிபதிகள், ‘உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளை அமல்படுத்த அதிகாரிகளை கொண்ட குழுவை தமிழக அரசு அமைக்கப்போகிறதா? இல்லை நாங்களே உருவாக்கட்டுமா?’ என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி, இந்த குழுவை தமிழக அரசு விரைவில் அமைக்கும் என்று உத்தரவாதம் அளித்தார்.  நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-  உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகளை அமல்படுத்த தமிழக அரசு எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகளை அட்வகேட் ஜெனரல் எடுத்துக்கூறினார்.

ஆனால், அரசு தரப்பில் சொல்வதற்கும், உண்மை நிலவரத்துக்கும் வித்தியாசம் உள்ளது.  தற்போது, மது என்பது மிகப்பெரிய சமுதாய பிரச்சினையாக உள்ளது. எனவே, 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்வதை தடுப்பது, ஏழைகள் தங்களது வருமானத்தில் பெரும் பங்கை மதுவுக்காக செலவு செய்வதை தடுப்பது ஆகிய 2 பிரச்சினைகளை முதலில் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.  எனவே, தமிழக அரசு அமைக்கும் குழு இந்த 2 முக்கிய விஷயங்களுடன், தமிழகத்தில் அதிக அளவில் மது அருந்துவதை எப்படி குறைப்பது? என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். இந்த பணிக்கு சமூக ஆர்வலர்களின் உதவி இருந்தால் எளிதில் வெற்றி பெறலாம். மதுவின் தீமை குறித்து பல்வேறு விதமான பயிற்சிகளும், விழிப்புணர்வும் மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.

உதாரணத்துக்கு, மது வாங்க வரும் நபரின் வயதில் சந்தேகம் இருந்தால், அவர் 21 வயது பூர்த்தியானவர் என்பதற்கான அடையாள அட்டையை வாங்கிப்பார்த்து உறுதி செய்ய வேண்டும். மது விற்பனை செய்யப்படும் டாஸ்மாக் கடைகளில் இதுபோன்ற விதிமுறைகள் கடுமையாக பின்பற்றினால், இளம் வயதினருக்கு மது கிடைக்காது. அவர்களும் மதுவுக்கு அடிமையாக மாட்டார்கள்.  எனவே, அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் இதுகுறித்து சுற்றறிக்கையை அனுப்பி, வயது தொடர்பாக எந்தெந்த ஆவணங்களை வாங்கி சரிபார்க்க வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும்.  மது தொடர்பான விழிப்புணர்வு பணிகளில் ஈடுபடுபவர்களுக்குத்தான், எந்தெந்த பகுதிகளில் விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும்? மதுவுக்கு அடிமையானவர்களை அப்பழக்கத்தில் இருந்து மீட்டு எப்படி மறுவாழ்வு வழங்குவது? என்பது குறித்து தெளிவாக தெரியும்.

எனவே, தமிழக அரசு அதிகபட்சம் 2 வாரத்துக்குள் இதுதொடர்பான குழுவை அமைக்கவேண்டும். பின்னர், அந்த குழுவில் இடம் பெற்றவர்கள், மதுவுக்கு எதிராக தாங்கள் செய்த நடவடிக்கைகள் குறித்த அனைத்து விவரங்களையும் அறிக்கையாக 2 மாதத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.  இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

ஐகோர்ட்ஒழிப்புசென்னைதடைமதுரத்துவக்கீல்வழக்குவிழிப்புனர்வு
Comments (0)
Add Comment