மேலும் சென்னை திருவான்மியூர் பழைய மகாபலிபுரம் சாலையை, ஜூலை 2-ஆம் தேதி அதிகாலை முனுசாமி என்பவர் கடந்து செல்ல முயற்சித்தார். அப்போது வேகமாக வந்த சொகுசு கார் (ஆடி கார்) முனுசாமி மீது மோதியது. இதில், முனுசாமி நிகழ்விடத்தில் உயிரிழந்தார்.இதுகுறித்து, கிண்டி போக்குவரத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து, காரை குடிபோதையில் வேகமாக ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியதாக, சேத்துப்பட்டைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள் ஐஸ்வர்யா வில்டான் (வயது 26) என்பவரை கைது செய்தனர்.
பின்னர், சென்னை செஷன்ஸ் நீதிமன்றம், உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி ஐஸ்வர்யா தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. பின்னர், 3-ஆவது முறையாக, உயர்நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு நடைபெற்று வந்தது. இதன் பின்னர், நீதிபதி சொக்கலிங்கம் அமர்வுக்கு மாற்றப்பட்டது.
இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், ஜாமீன் மனு மீது நீதிபதி சொக்கலிங்கம் வெள்ளிக்கிழமை தீர்ப்பு அளித்தார்.அவர் பிறப்பித்த தீர்ப்பு: மனுதாரர் கடந்த 42 நாள்களாக சிறையில் உள்ளார்.இவற்றை கருத்தில் கொண்டு, அவருக்கு நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்குகிறேன்.அவர் ரூ.1 லட்சம், அதே தொகைக்கு இரு நபர் உத்தரவாதம் வழங்கி, சைதாப்பேட்டை 18-ஆவது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவதற்காக, ரூ.1 லட்சம் ரொக்கமாகச் செலுத்த வேண்டும். இந்த இழப்பீட்டுத் தொகையை பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உரிய மனுவைத் தாக்கல் செய்து, தகுந்த அடையாள ஆவணங்களுடன் இழப்பீட்டை கீழ் நீதிமன்றத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
அடுத்த இரண்டு வாரத்திற்கு, மனுதாரர்(ஐஸ்வர்யா) விசாரணை அதிகாரி முன்னிலையில் காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜாரகி கையெழுத்திட வேண்டும்.மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, சென்னை மாநகரை விட்டு வெளியே செல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.