மத்திய அரசின் திட்டங்களை விளம்பரப்படுத்துவது நிறுத்தப்பட்டுவிட்டது. ஏற்கனவே இதுதொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீசு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. “சுத்தமான இந்தியா” என்பதற்கான விளம்பரத்தை மற்ற அரசுத் திட்டங்களுக்கான விளம்பரம் போல கருத முடியாது. “புகைப்பிடிக்காதீர்” என்று விளம்பரம் செய்வது போன்றதுதான் அது.
தமிழகத்தில் மொத்தம் 22 ஆயிரத்து 692 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் உள்ளன. அவற்றில் இதுவரை 19 ஆயிரத்து 382 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வாகன சோதனை நடவடிக்கைகளின்போது, தேர்தல் நடத்தை விதிகளை மீறி கொண்டு செல்லப்பட்டதாக ரூ.20.04 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. மேலும் 28 ஆயிரம் லிட்டர் மதுபானமும் கைப்பற்றப்பட்டுள்ளது. சில பிரச்சினைக்குரிய மாவட்டங்களில் போலீஸ் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள். பொதுவாக, மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் தேர்தல் செலவீனப் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர். தமிழகத்தில் 9 ஆயிரத்து 360 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த வாக்குச்சாவடிகளை அதிக பதற்றம், பதற்றம் என்பதுபோன்ற அளவில் வகைப்படுத்தியுள்ளோம். அதிக பதற்றத்துக்குரிய வாக்குச்சாவடிகளில் மத்திய பாதுகாப்பு படையினர் நிறுத்தப்படுவார்கள். பதற்றத்துக்குரிய வேறு சில வாக்குச்சாவடிகளில் நுண் பார்வையாளர்கள் நிறுத்தப்படுவார்கள். பதற்றத்துக்குரிய அனைத்து வாக்குச்சாவடிகளிலுமே 10 ஆயிரம் வீடியோ கேமராக்கள் மூலம் வீடியோ பதிவும், 30 ஆயிரம் வெப் கேமராக்கள் மூலம் வாக்குப்பதிவு நேரடி ஒளிபரப்பும் செய்யப்படும். தமிழகம், புதுச்சேரி மாநிலங்களின் தேர்தல் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்வதற்காக இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி தலைமையில் 9 பேர் கொண்ட குழு இங்கு வருகிறது. அந்த குழுவில் தேர்தல் கமிஷனர்கள் ஏ.கே.ஜோதி, ஓம் பிரகாஷ் ராவத் ஆகியோர் உள்ளனர்.
மேலும், இந்திய தேர்தல் கமிஷனின் துணைக் கமிஷனர் (தமிழ்நாடு பொறுப்பு) உமேஷ் சின்ஹா, துணை கமிஷனர் சந்தீப் சக்சேனா, டைரக்டர் ஜெனரல் (பயிற்சி) சுதீப் ஜெயின், இயக்குனர் (செலவீனம்) ஸ்வேன், ஐ.ஏ.எஸ். அதிகாரி நிகில்குமார், இயக்குனர் (மீடியா) ஜித்தேந்திர ஓஜா ஆகியோரும் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வருகின்றனர். அவர்கள் இன்று பிற்பகல் 12.30 மணி அளவில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்னைக்கு பிற்பகல் 3.25 மணிக்கு வந்து சேர்கின்றனர். அங்கிருந்து சாலை வழியாக பயணித்து மாலை 6.30 மணிக்கு புதுச்சேரியை சென்றடைகின்றனர். அன்று இரவு 7.30 மணி முதல் 8.30 மணிவரை, புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி, மாநில அளவிலான அதிகாரிகள் உள்பட பலவேறு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.
7-ந் தேதியன்று காலை 9 மணியில் இருந்து 10 மணி வரை அங்குள்ள அரசியல் கட்சியினருடன் ஆலோசனை நடத்துகின்றனர். பின்னர் காலை 10.15 முதல் 11.45 மணி வரை மாவட்ட தேர்தல் அதிகாரிகள், சிறப்பு போலீஸ் சூப்பிரண்டுகள், டி.ஐ.ஜி., ஐ.ஜி. ஆகியோருடன் இந்திய தேர்தல் கமிஷன் குழுவினர் கலந்தாலோசிக்கின்றனர். பின்னர் பகல் 12 மணியில் இருந்து பிற்பகல் ஒரு மணி வரை புதுச்சேரியின் தலைமைச் செயலாளர், டி.ஜி.பி., கலால் வரி கமிஷனர், வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் தொடர்புடைய அதிகாரிகளை சந்தித்து பேசுகின்றனர். பின்னர் அரை மணிநேரம் பத்திரிகையாளர்களுக்கு நசீம் ஜைதி பேட்டி அளிக்கிறார்.
மதிய உணவை புதுச்சேரியில் முடித்துவிட்டு 7-ந் தேதி பிற்பகல் 2 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு சென்னையை 9 பேர் குழு வந்தடைகிறது. சென்னையில் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மாலை 6 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் அங்கீகரிக்கப்பட்ட மாநில மற்றும் மத்திய கட்சிகள் கலந்துகொள்கின்றன. பின்னர் இரவு 7.30 மணியில் இருந்து 8.30 மணி வரை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் பல அதிகாரிகளை சந்தித்து பேசுகின்றனர். இரவில் ஓட்டலில் தங்குகின்றனர். பின்னர் 8-ந் தேதியன்று காலை 9.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், சிறப்பு போலீஸ் சூப்பிரண்டுகள், டி.ஐ.ஜி., ஐ.ஜி. ஆகியோரை சந்தித்து ஆலோசிக்கின்றனர்.
மதிய உணவுக்கு பிறகு 3 மணி முதல் 4 மணி வரை தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், டி.ஜி.பி., வருமான வரித்துறை கமிஷனர், கலால் வரித்துறை கமிஷனர் ஆகியோருடன் கலந்துரையாடுகின்றனர். பின்னர் பிற்பகல் 4.30 முதல் 5 மணி வரை பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேட்டி அளிக்கின்றனர். அதன் பின்னர் இரவு 7.30 மணிக்கு 9 பேர் குழு டெல்லி புறப்பட்டுச் செல்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.