இம்மனு மீதான வாதத்தின்போது, சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் கூறியதாவது, “குறித்த மாணவி, மன்னார் மாவட்டத்தில் பிறந்து, அங்கிருந்து இடம்பெயர்ந்த நிலையில், அநுராதபுரம் மாவட்டத்தில், தரம் ஐந்து வரை கல்வி கற்றுள்ளார். பின்னர், கொழும்பு மாவட்டத்தில் கல்வியைத் தொடர்ந்த அவர், அங்கேயே க.பொ.த சாதாரண தரப் பரீட்சையையும் எழுதியிருக்கிறார். பின்னர், இம்மாணவியின் பெற்றோர், மன்னாரில் மீளக்குடியேறியதனால், மன்னாரில் க.பொ.த உயர்தரப் படிப்பை மேற்கொள்வதற்கு முயற்சித்த போதிலும், அங்கு வசதியீனம் காரணமாக, அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள பாடசாலையொன்றில் சேர்ந்து, உயர்க்கல்வியைத் தொடர்ந்து, கடந்த 2016இல், பரீட்சைக்குத் தோற்றினார்.
“பிரிதொரு மாவட்டத்தில் பரீட்சைக்குத் தோன்றினார் எனத் தெரிவித்து, இவரது பரீட்சைப் பெறுபேறுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருப்பதானது, அநீதியான செயலாகும் என்பதுடன், இவரது அடிப்படை உரிமையையும் அது மீறுகின்றது” என, சட்டத்தரணி எடுத்துரைத்தார். இவ்வாதத்தைச் செவிமடுத்த பிரதம நீதியரசர் பிரசாத் டெப், குறித்த மாணவியின் க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளை உடனடியாக வெளியிட்டு, அவரது பாடசாலைக்கு அனுப்பி வைக்குமாறு, பரீட்சைகள் ஆணையாளருக்கு உத்தரவிட்டதுடன், இந்த மாணவிக்கு, எந்த மாவட்டத்தில் இருந்து பல்கலைக்கழக அனுமதியை வழங்க வேண்டுமெனத் தீர்மானித்துக் கொள்ளுமாறும் அறிவித்தார். இவ்வழக்கின் மனுதாரர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பருடன், சட்டத்தரணி எம்.எம்.நவாஸ் ஆஜராகியிருந்தார். பிரதிவாதிகள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி பி.சுரேகா ஆஜராகியிருந்தார்.