2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை, ஆ.ராசா தவறாக வழிநடத்தினார் என சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.
2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று இறுதி வாதம் தொடங்கியது. வாதத்தை தொடங்கிய அரசு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஆ.ராசா மன்மோகன் சிங்கை தவறாக வழிநடத்தினார் என குற்றம்சாட்டினார்.
தகுதியற்ற நிறுவனங்களுக்கு ராசா அலைகற்றையை ஒதுக்கீடு செய்ததாகவும், ஏல விண்ணப்பிப்பு தேதியை குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு ஏதுவாக மாற்றி அமைத்ததாகவும் வாதிட்டார்.
முன்னுரிமை அடிப்படையில் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்தது குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக அமைந்தது என தெரிவித்த ஆனந்த் குரோவர், இதனால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக வாதிட்டார்.
இந்த காலக்கட்டங்களில் ராசா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் சட்ட அமைச்சர் பரத்வாஜ் உள்ளிட்டோருக்கு இடையே நடைபெற்ற கடித பரிமாற்றங்களையும் குரோவர் சுட்டிக் காட்டினார். இதனிடையே வாதங்களை முன் வைக்க இரு தரப்பிலும் கால அவகாசம் கோரப்பட்டது. இதனை அடுத்து வழக்கு விசாரணை மே. 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.