முக்கிய அரசியல் தலைவர்கள் குறித்து அவர் பேசியது:
அனுபவச் சுரங்கம் தந்தை பெரியார்
தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு பலரும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய அனுபவச் சுரங்கம். இறக்கும் வரை சமூக மேம்பாட்டுக்காக உழைத்த ஒரு பெரிய தலைவர் நம்மிடம் உண்டென்றால் அது தந்தை பெரியார்தான்.
பெண்கள் முன்னேற்றத்தைப் பற்றிப் பேசி, அதற்காக உழைத்த தலைவர்களின் வரிசையில் தந்தை பெரியாருக்கு முதலிடம் என்றைக்குமே உண்டு.
பேரறிஞர் அண்ணா
பேரறிஞர் அண்ணா, அரசியலில் கருத்து மாறுபட்டவர்களையும் வாழ்த்தியவர். கட்சித் தொண்டர்களிடம் குடும்பப் பாசத்தைப் புகுத்திய திறனும், எழுத்தாற்றலில் பொருள் பொதிந்த அடுக்குமொழிகளை அறிமுகப்படுத்திய விதமும், கலைத் துறையை முழுமையாக அரசியலுக்குப் பயன்படுத்தி வெற்றி கண்ட தன்மையும் அண்ணா ஒருவருக்கு மட்டுமே கைவரப் பெற்ற கலையாகும்.
ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன் என்ற அண்ணாவின் முழக்கம் என்றென்றும் அவர் வழி நடப்போர்களின் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
அண்ணாவின் பெருந்தன்மை அகில உலகப் பெயர் பெற்றது. அவரது சகிப்புத்தன்மை இமாலயப் பெருமை கொண்டது. உறுதியான கொள்கைப் பிடிப்புள்ள வலுவான தொண்டர்களின் தலைவரான அண்ணா வன்முறையை நாடாத வரலாற்று நாயகர்.
எம்.ஜி.ஆர்.
கோடிக்கணக்கான ஏழைகளின் உதடுகளுக்குப் புன்னகையாகவும், புது நம்பிக்கையாகவும், தனது இளமைக் காலம் முதல் திரைப்படத் துறையிலும், அரசியல் வாழ்விலும் திகழ்ந்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
மக்களோடு பழகி, மக்களோடு வாழ்ந்து, மக்களுக்காக உழைத்து, மக்களுக்கு வாரி வழங்கி, மக்களுக்காகச் சிந்தித்து மக்கள் திலகமாய், மன்னாதி மன்னனாய் வாழ்ந்து மறைந்த அவரைத்தான், இன்று லட்சோப லட்சம் தமிழ் மக்கள், தங்கள் இதயக் கோயிலில் தங்க சிம்மாசனமிட்டு அமர்த்தி மகிழ்கிறார்கள். அவர் மக்களிடம் காட்டிய அன்பும், பரிவும் மக்கள் அவரிடம் காட்டிய ஆர்வமும், பாசமும், உலக வரலாறு காணாத அற்புதங்கள்.
காமராஜர்
காமராஜரின் எளிமை தமிழகத்தை மட்டுமல்ல, இந்தியாவை மட்டுமல்ல, உலகத்தையே வசீகரித்தது. பெருந்தலைவர் காமராஜர் உடையில் மட்டுமல்ல, உணவில், பிறருடன் பழகுவதில், மேடைப் பேச்சு- இப்படி எல்லாவற்றிலும் அவருடைய எளிமை ஒளிவீசியது.
காமராஜரின் அத்தனை பண்பு நலன்களையும் கைக்கொள்ள முடியாவிட்டாலும், அவற்றில் ஒரு சிலவற்றையாவது இன்று அரசியலுக்கு வர விரும்புவோர் பின்பற்ற வேண்டும் என்பதே அவரது வாழ்க்கை நமக்குச் சுட்டிக் காட்டும் உண்மையாகும்.
காமராஜர் பிறந்து நூற்றாண்டுகள் கடந்த போதிலும், நம்முடைய நினைவில் அவருடைய எளிமையால், தன்னலமற்ற தொண்டால், நாட்டுப்பற்றால், புரிந்த தியாகத்தால் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் அது மிகையாகாது.