பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஆட்சியுரிமை (விசேட ஏற்பாடுகள்) சட்ட மூலம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே வடிவேல் சுரேஷ் எம்.பி. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
வட கிழக்கு மக்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்தார்கள். எனவே அவர்களுக்கு காணிப் பிரச்சினைகள் தலைதூக்கின. அதற்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் அரசின் முயற்சியை வரவேற்கின்றோம்.
ஆனால் யுத்தம் இல்லாமலேயே மலையக மக்கள் இன்று காணியில்லாமல் வாழ்கின்றனர். மலசல கூடமொன்றை நிர்மாணித்துக் கொள்வதற்கு காணி பெற்றுக் கொள்வதற்கும் மலையக மக்கள் சிரமப்படுகின்றனர்.
ஆனால் ஒவ்வொரு தோட்டங்களிலும் மதுபானசாலைகள் அமைப்பதற்கு காணிகள் வழங்கப்பட்டுள்ளன.
பெருந்தோட்ட மக்களை இலக்கு வைத்து இன அழிப்பை ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு மலையகத்தில் மதுபானசாலைகள் தலையெடுத்துள்ளன.
பதுளையில் ஒவ்வொரு தோட்டங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் மதுபானசாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால் மலையக சமூகம் சீரழிவுக்கு உள்ளாகியுள்ளது.
சிங்கள, முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களிலோ அல்லது நகரங்களிலோ கிராமங்களிலோ இல்லாத வகையில் மலையகத்தில் மதுபானசாலைகள் திறக்கப்படுகின்றன.
பதுளை, நுவரெலியா, கண்டி உட்பட மலையகத்தில் மதுபானசாலைகள் அதிகம் உள்ளன.
இது மலையக மக்களை இலக்கு வைத்த இனச் சுத்திகரிப்பே என எண்ணத் தோன்றுகிறது.
அதேவேளை, மலையகத்தில் விற்பனை செய்யப்படும் கள்ளில் பைத்தியக்கார வைத்தியசாலைகளில் பைத்தியக்காரர்களை தூங்க வைப்பதற்காக வழங்கப்படும் மாத்திரைகள் கலக்கப்படுகின்றன என்றும் வடிவேல் சுரேஷ் எம்.பி. தெரிவித்துள்ளார்.