சென்னையில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையினால் ஏரிகள் நிரம்பி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது அந்த பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டு இருக்கின்றன.
இந்தநிலையில், சென்னையில் வெள்ளநீர் வடிந்துவிட்டதால், தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மழைக்கால தொற்றுநோய்களில் இருந்து தப்புவது எப்படி? என்பதை சென்னை மாநகர மக்கள் தெரிந்துகொள்வதற்கு வசதியாக செல்போனில் குறுஞ்செய்தி மூலம் தகவல்களை அனுப்பி வருகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சென்னை மாநகர மக்கள் மழைக்கால தொற்றுநோய்களில் இருந்து தப்புவது எப்படி? என்பதை தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக, எளிய தமிழில் அவர்களுடைய செல்போனுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்ப திட்டமிடப்பட்டது. அதன்படி, சென்னையில் 70 லட்சம் பேருக்கு செல்போன் மூலம் கடந்த 11-ந்தேதி முதல் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருகிறது. வருகிற 25-ந்தேதி வரை இந்த குறுஞ்செய்தி அனுப்பப்படும். செல்போனில் அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் விவரம் வருமாறு:-
குடிநீரை கொதிக்க வைத்து, ஆற வைத்து குடிக்கவும். வயிற்றுப்போக்கு, காய்ச்சல் ஏற்பட்டால் உடனே அருகில் இருக்கும் மாநகராட்சி மருத்துவமனையை அணுக வேண்டும். உணவு உட்கொள்ளும் முன் கைகளை சோப்பினால் நன்கு கழுவ வேண்டும். வீட்டில் உள்ள மேல், கீழ்நிலை தொட்டிகளை பழைய நீரினை அகற்றி பிளீச்சிங் பவுடர் மூலம் தேய்த்து கழுவி உலர வைத்து பயன்படுத்த வேண்டும்.
திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை கழிப்பதை தவிர்த்து, பொது கழிவறையை பயன்படுத்த வேண்டும். காலணிகளை அணிந்து சென்றால் நோய் வராமல் தடுக்கலாம். இவ்வாறு குறுஞ்செய்தி அனுப்பப்படுவதாக அவர் கூறினார்.