சென்னை மவுலிவாக்கத்தில் இரண்டு 11 மாடி கட்டிடங்கள் அருகே கட்டப்பட்டன. கடந்த 2014–ம் ஆண்டு ஜூன் மாதம் 28–ந்தேதி பலத்த மழை பெய்த போது அதில் ஒரு 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. பலத்த இடி தாக்கியதன் காரணமாக அந்த 11 மாடி கட்டிடம் சீட்டுக்கட்டு சரிவது போல சரிந்து விழுந்தது.
இந்த கோர சம்பவம் நடந்த போது அந்த கட்டிட பகுதியில் ஏராளமான ஆந்திரா கட்டுமான தொழிலாளர்கள் இருந்தனர். அவர்களில் 61 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அருகில் உள்ள மற்றொரு 11 மாடி கட்டிடத்தை இடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. கட்டுமானம் உறுதியான தன்மையுடன் கட்டப்படாததால் அந்த கட்டிடத்தை இடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.
மவுலிவாக்கத்தில் உள்ள 11 மாடி கட்டிடத்தை இடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அந்த பகுதியில் உள்ள பொது மக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் 11 மாடி கட்டிடம் இடிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். 11 மாடி கட்டிடம் முழுவதும் பலம் இல்லாமல் இருப்பதால், அது மக்கள் குடிபுக ஏற்றதல்ல என்று 4 பேர் குழு பரிந்துரை செய்து இருப்பதை ஏற்று இந்த உத்தரவை பிறப்பித்து இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். 11 மாடி கட்டிடத்தை இடிக்க செலவாகும் தொகை பற்றி 4 வாரங்களுக்குள் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு காரணமாக மவுலிவாக்கத்தில் உள்ள 11 மாடி கட்டிடம் விரைவில் இடிக்கப்பட உள்ளது.