இதுதொடர்பாக முகநூலில் கருத்து பதிவு செய்துள்ள திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், ஒரு கல்வி நிறுவனத்தின் செயல்பாட்டில் மத்திய அரசு தேவையற்ற முறையில் தலையிடுவதையே இந்த நடவடிக்கை எடுத்துக் காட்டுவதாக விமர்சனம் செய்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரதிய ஜனதா ஆட்சியில் கல்வித்துறை காவி மயமாக்கப்படுவதை எதிர்த்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மத்தியில் பாரதிய ஜனதா அரசு அமைந்த கடந்த ஓராண்டு காலமாக கருத்துரிமையின் மீதும், மாற்றுக் கருத்து கூறுவோர் மீதும் தாக்குதலை சங் பரிவார் அமைப்புகள் நடத்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
அம்பேத்கர் பெரியார் மாணவர் வட்ட அமைப்பு மீதான தடையை உடனே திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அரசியல் சட்டம் வழங்கி உள்ள அடிப்படை கருத்துரிமையை பறிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என கூறியுள்ளார்.
இதேபோல, விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயர்கல்வி நிறுவனங்கள் திட்டமிட்ட முறையில் காவிமயமாக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். பெயர் குறிப்பிடாமல் யாரோ ஒருவர் எழுதிய கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு, மாணவர் அமைப்புக்கு தடை விதித்திருப்பது எந்த வகையில் நியாயம் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.