மாவீரர்நாள் அறிக்கை தரவிறக்கம் செய்ய
அனைத்துலகத் தொடர்பகம்
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்.
நவம்பர் 27, 2023
எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!
இன்று மாவீரர் நாள். தமிழீழத் தாய்நாட்டின் விடிவிற்காகத் தம்மை தியாகம் செய்து எமது எண்ணம் எல்லாம் நிறைந்து நிற்கும் எமது வீரர்களை வணங்கி போற்றும் புனிதநாள். ஆண்டாண்டு காலமாக அந்நிய ஆக்கிரமிப்பில் அடிமைப்பட்டிருந்த எமதினத்திற்கு சுதந்திர தாகத்தினை ஊட்டி வளர்த்த எமது வீரமறவர்களை பூசித்து வணக்கும் திருநாள். எமது தேசத்தின் விடுதலையை நெஞ்சில் நிறுத்தி வெஞ்சமராடிய எமது வீரமா வேங்கைகளை நினைவேந்தும் தேசிய நாள்.
மாவீரர்கள் எமது மண்ணை ஆழமாக காதலித்தார்கள். தாயக விடுதலைக்காக தியாக வேள்வியில் தம்மை அர்ப்பணிக்கும் வரை ஊண் உறக்கமின்றி எமது எல்லைகளை காத்து நின்ற காவல் தெய்வங்கள். இவர்களின் தியாகங்களுக்கு இவ்வுலகில் ஒப்புவமை இல்லை. எத்தேசத்திலும் நிகழ்ந்திராத அர்பணிப்புகளையும் அதிசயங்களையும் எம் முன்னேதான் நிகழ்த்திச் சென்றுள்ளார்கள்.
ஆண்டாண்டு காலமாக நாம் எமது முன்னோர்கள் வாழ்ந்து ஆண்ட இந்த மண்ணிலேயேதான் மாவீரர்களும் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்துள்ளனர். இந்த காற்றினையே சுவாசித்து, எமது கடல் மடியிலேயே தவழ்ந்து, கானகம் எங்கும் காலடித்தடம் பதித்துள்ளனர். எமது வரலாற்று தாயகத்தின் மடியிலேயே தான் அவர்கள் உறக்கமும் கொள்கின்றனர். இந்த மண் எமக்கே உரித்துடைய பூமி. இந்த மண்ணையும் தமிழ் மக்களையும் அடக்கி ஆள சிங்கள தேசம் ஆண்டாண்டு காலமாக கங்கணம் கட்டிக் கொண்டு அலைகின்றது.
இந்த ஆசையின் பிரகாரமே எமது தேசத்தில் பேரழிவினை ஏற்படுத்தி எமது மக்களை துப்பாக்கிமுனையில் அடக்கிவிட துடியாக துடித்து வருகின்றது. தனது சொந்த பொருளாதாரத்தையே அதல பாதாளத்தில் தள்ளி எம்மை அடிமை கொள்ள விளைகின்றது. ஆயின் எமது மாவீரர்களின் தியாகத்தின் முன் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களின் எண்ணம் எப்போதும் ஈடேறாது என்பது திண்ணம்.
எமது அன்பான மக்களே!
இன்று எமது தேசம் சிங்கள தேசத்தினால் வல்வளைப்பு செய்யப்பட்டுள்ளது. 14 ஆண்டுகளுக்கு மேலாக இராணுவ வல்லாதிக்கத்தினூடாக எமது மக்களின் விடுதலை தாகத்தினை நசுக்க முற்படும் அதேவேளையில், தமிழ் மக்களின் தாயக பூமி எங்கும் பெளத்த விகாரைகளை அமைப்பதினூடாகவும், வலிந்து உருவாக்கப்படும் சிங்கள குடியேற்றங்களினூடாகவும் இனப்பரம்பலை மாற்றி அமைத்து எமது தாயக கோட்பாட்டினை சிதைப்பதில் பெளத்த சிங்கள தேசம் மிக தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், வனப் பாதுகாப்புத் திணைக்களம், நிலவள திணைக்களம், பௌத்த சாசன அமைச்சு மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை என்பவற்றினூடாக நில அபகரிப்பினை சாதுரியமாகவும் செய்து வருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தனை, மாதவனை மேய்ச்சல் தரை அபகரிப்பிலிருந்து யாழ் தையிட்டி விகாரை அமைக்கப்படுவது வரை தமிழர் தாயகம் எங்குமே சிங்களம் தனது கோர கரங்களை பரப்பி வருகின்றது. தமிழ் மக்களின் நிலங்களை அவர்களின் அனுமதி இன்றியே வெளி சக்திகளுக்கும் தாரை வார்த்து வருகின்றது.
இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தமிழர் தாயகத்தில் ஒரு மறைமுகமான இன அழிப்புக் கொள்கையே வேகமாகச் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. இராணுவ அட்டூழியங்களும் சொந்த மண்ணிலேயே சிறைப்பட்ட வாழ்வுமாக எம்மக்கள் நாளாந்தம் அனுபவிக்கும் துயரம் மிகக்கொடியது. கொடிய யுத்தத்தின் போது இனவழிப்பிற்கு உள்ளான உறவுகளுக்கு நீதி வேண்டி ஒருபுறமும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடும் மக்கள் மறுபுறமும், அபகரிக்கப்படும் நிலங்களை மீட்க போராடும் மக்கள் இன்னுமொரு புறமுமாக போராட்டமே வாழ்க்கையாக உள்ளது. இருந்தபோதும், எமது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை. சுதந்திர தாகம் கொண்டு, எழுச்சி கொண்ட எம்மக்களை எந்தத் தடைகளாலும் எதுவும் செய்துவிடமுடியாது. அழிவுகளையும் இழப்புக்களையும் நித்தம் சந்தித்து வாழ்ந்தவர்கள். இதனால் அவர்களது இலட்சிய உறுதி மேலும் உரமாகியிருக்கிறது. விடுதலைக்கான வேகம் மேலும் வீச்சாகியிருக்கிறது.
பல்வேறு அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் தமிழ் மக்கள் தன்னெழுச்சியாக தமது உரிமை குரலினை வெளிப்படுத்தியே வருகின்றனர். சிங்கள இராணுவம் மற்றும் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல், அடாவடி நடவடிக்கைகளை தாண்டியே தமது நிலத்தையும், மொழியையும், பண்பாட்டினை பாதுகாக்கவும், தக்க வைக்கவும் போராடி வருகின்றனர். எமது இளைய தலைமுறையினர் இடையே மது, போதை போன்ற சமூக சீர்கேடுகளை உருவாக்கி விடுதலை உணர்வை மழுங்க செய்யும் முயற்சிகளை சிங்கள பெளத்த வல்லாதிக்கம் செய்து வருகின்றது. சில தமிழின விரோதிகளும் இவ்விடயங்களுக்கு துணை போவார்களாகவும் தனதினத்தை அழிக்கும் கோடாலி காம்புகளாக மாறி வருகின்றனர். இவையனைத்தையும் தாண்டியே எமது விடுதலை பயணத்தை தொடர வேண்டிய நிலையில் எமது இனம் உள்ளது.
சுயநிர்ணய உரிமைக்கான எமது இந்த அரசியல் போராட்டம் கடந்த எழுபது ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துச்செல்கிறது. இந்த நீண்ட படிநிலை வரலாற்றில், வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வடிவங்களாக எமது போராட்டம் வளர்ச்சியும் முதிர்ச்சியும் கண்டு வந்திருக்கிறது. ஆரம்பத்தில் அமைதியாக, மென்முறை வடிவில், ஜனநாயக வழியில் அமைதி வழிப்போராட்டங்கள் வாயிலாக எமது மக்கள் நீதிகேட்டுப் போராடினார்கள். அரசியல் உரிமை கோரி, தமிழ் மக்கள் தொடுத்த சாத்வீகப் போராட்டங்களைச் சிங்கள இனவாத அரசு ஆயுத வன்முறை வாயிலாக மிருகத்தனமாக ஒடுக்க முனைந்தது. அரச ஒடுக்குமுறை கட்டுக்கடங்காமல் உக்கிரம் அடைந்து, அதன் தாங்க முடியாத கொடுமைகளை எமது மக்கள் சந்தித்தபோதுதான், வரலாற்றின் தன்னியல்பான விதியாக எமது விடுதலை இயக்கம் பிறப்பெடுத்தது. சிங்கள இனவாத அரசின் ஆயுதப் பயங்கரவாதத்திலிருந்து எமது மக்களைப் பாதுகாக்கவே நாம் ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டோம். ஆயுத வன்முறை வழியை நாம் விரும்பித் தேர்வு செய்யவில்லை. வரலாறுதான் எம்மிடம் கட்டாயமாகக் கையளித்தது. ஆயின் பூகோள அரசியல் சூழலில் சிக்கி எமது நியாயமான சுதந்திர போராட்டம் உலக நாடுகளின் வல்லாதிக்க தேவைகளுக்காக ஒடுக்கப்பட்டாலும் எமது மக்களின் விடுதலை தாகத்தினை எந்த வல்லாதிக்க சக்திகளாலும் ஒடுக்கி விட முடியாது.
தமிழரின் தேசியப் பிரச்சினை விடயத்தில், சிங்களம் அடக்குமுறை என்ற ஒரே பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறது. இராணுவ வன்முறைப் பாதையைக் கைவிட்டு, சிங்களம் நீதி வழங்கும் என எமது மக்கள் வைத்திருந்த சிறிய நம்பிக்கையும் 2009 உடன் அடியோடு அழிந்துவிட்டது. சிங்கள தேசத்திலே கடந்த எழுபது ஆண்டுகளாக நிகழாத அரசியல் மாற்றம் இனிவரும் காலங்களில் நிகழ்ந்துவிடப் போவதுமில்லை, அப்படி நம்பி ஏமாறுவதற்கு எமது மக்களும் தயாராக இல்லை. தமது பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து சிங்களதேசம் வங்குரோத்து நிலையை அடைந்த போது தமது பொருளாதாரத்தை சீர்செய்யவும், சர்வதேச கடன்களை பெறவும் தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்குவதாக நாடகம் ஆடியவர்கள், சிறிது சீர்நிலை அடைந்ததும் தமிழினத்தின் அரசியல் பிரச்சினையை அடியோடு மறந்து விட்டனர். தொடர்ந்தும் எமது மரபுவழி தாயகம் நிலஅபகரிப்புக்கு உள்ளாக்கப்பட்டு, தமிழ் மக்களுக்கான நியாமான அரசியல் அபிலாசைகள் நிறைவேற்றப்படாதவிடத்து சிங்களம் விளங்கிக்கொள்ளும் ஆயுத போராடத்தித்தினை தொடர்வதே எமது ஒரே தெரிவாக இருக்கும். இந்த தெரிவு மீண்டும் எம் மீது திணிக்கவே படுகின்றது என்பதை சிங்கள மக்களும் எமது விடுதலை போராட்டத்தினை ஒடுக்க துணை நின்ற சர்வதேச சக்திகளும் விளங்கிக்கொள்ள வேண்டும். தற்போதைய பூகோள சூழமைவில் பலமானவர்கள் சார்ந்தே உலக ஒழுங்கு வகுக்கப்படுகின்றது. நாம் எமது வலிமையை மீண்டும் நிலைநிறுத்தும் போதே இவ்வுலகம் எமது நியாயங்களை விளங்கிக்கொள்ளும்.
உலகத் தமிழினத்தின் ஒட்டுமொத்தப் பேராதரவோடு தான் எமது போரட்டம் தொடர்ந்து வருகின்றது. அதுமட்டுமன்று, எமது போராட்டம் எந்தவொரு நாட்டினதும் தேசிய நலன்களுக்கோ அவற்றின் புவிசார் நலன்களுக்கோ பொருளாதார நலன்களுக்கோ குறுக்காக நிற்கவில்லை.
எமது மக்களது ஆழமான அபிலாசைகளும் எந்தவொரு தேசத்தினதும் எந்த மக்களினதும் தேசிய நலன்களுக்குப் பங்கமாக அமையவில்லை. அத்தோடு இந்த நீண்ட போராட்ட வரலாற்றில், நாம் திட்டமிட்டு எந்தவொரு தேசத்திற்கு எதிராகவும் நடந்துகொண்டதுமில்லை.
எமது விடுதலை இயக்கமும் சரி எமது மக்களும் சரி என்றுமே உலக நாடுகளுடனும், எமது அண்டை நாடான இந்தியாவுடனும் நட்புறவை வளர்த்துச் செயற்படவே விரும்புகிறோம். இதற்கான புறநிலைகளை உருவாக்கி, நட்புறவுப் பாலத்தை வளர்த்து விடவே சித்தமாக இருக்கிறோம். எமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, காத்திரமான உறவுகளைக் கட்டியெழுப்புவதற்குக் காத்து நிற்கிறோம். எம்மை தடை செய்துள்ள நாடுகள், எமது மக்களது அபிலாசைகளையும் ஆழமான விருப்பங்களையும் புரிந்து கொண்டு, எம்மீதான தடையை நீக்கி, எமது நீதியான போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டுமென அன்போடு வேண்டிக் கொள்கின்றோம்.
இன்று இந்திய தேசத்திலே பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அங்கு அடங்கிக் கிடந்த எமது போராட்ட ஆதரவுக்குரல்கள் இன்று மீளவும் ஓங்கி ஒலிக்கின்றன. எமது போராட்டத்தை ஏற்றுக் கொள்கின்ற ஏதுநிலைகள் வெளிப்படுகின்றன. கனிந்து வருகின்ற இந்தக் கால மாற்றத்திற்கேற்ப, இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன எமது உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறோம்.
அன்று, இந்தியா கைக்கொண்ட நிலைப்பாடுகளும் அணுகுமுறைகளும் தலையீடுகளும் ஈழத்தமிழருக்கும், அவர்களது போராட்டத்திற்கும் பாதகமாக அமைந்தன. இனவாத சிங்கள அரசு தனது கபட நாடகங்களால் எமது விடுதலை இயக்கத்திற்கும் முன்னைய இந்திய ஆட்சிப்பீடத்திற்கும் இடையே பகைமையை வளர்த்து விட்டது. இந்தப் பகைப்புலத்தில் எழுந்த முரண்பாடுகள் மேலும் முற்றிப் பெரும் போராக வெடித்தது. இதன் ஒட்டுமொத்த விளைவாக எமது மக்கள் பெரும் அழிவுகளைச் சந்திக்க நேர்ந்தது. நாம் எமது இலட்சியத்தில் உறுதியாக நின்ற காரணத்தினால்தான் எமது இயக்கத்திற்கும் இந்திய அரசிற்கும் பிணக்கு ஏற்பட்டது. எனினும், இந்தியாவை நாம் ஒருபோதும் பகை சக்தியாகக் கருதியதில்லை. இந்தியாவை எமது நட்புச் சக்தியாகவே எமது மக்கள் என்றும் கருதுகிறார்கள். எமது தேசியப் பிரச்சினை விடயத்தில் இந்தியப் பேரரசு ஒரு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.
காலமும், கடல் கடந்த தூரமும் எம்மைப் பிரிந்து நிற்கின்ற போதும், எமது மக்களின் இதயத்துடிப்பை நன்கறிந்து, தமிழகம் தொடர்ந்தும் எமது போராடத்தின் பால் குரல் கொடுப்பது தமிழீழ மக்கள் அனைவருக்கும் எமது விடுதலை இயக்கத்திற்கும் பெருத்த ஆறுதலையும், நம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றது. எம்மக்களுக்காக ஆதரவுக் குரல் எழுப்பி, அன்புக்கரம் நீட்டும் தமிழக மக்களுக்கும், தமிழகத் தலைவர்களுக்கும், இந்தியக் தலைவர்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்திலே எமது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தியாவிற்கும் எமது இயக்கத்திற்கும் இடையிலான நல்லுறவிற்குப் பெரும் இடைஞ்சலாக எழுந்து நிற்கும் எம்மீதான தடையை நீக்குவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அன்போடு வேண்டிக்கொள்கிறோம். எமது விடுதலை போராட்டத்தின் தாய் வீடாகவும், பின்தளமாகவும், ஆதரவு மையமாகவும் விளங்கிய தமிழகம் தொடர்ந்தும் எமது விடுதலை போராட்டத்தின் நீட்சிக்கு பங்கு வகிக்க வேண்டும் என்பதை அன்புரிமையுடன் வேண்டி நிற்கின்றோம்.
பூமிப்பந்திலே ஈழத்தமிழினம் ஒரு சிறிய தேசமாக இருக்கின்றபோதும் நாம் பெரும் வலிமை வாய்ந்த ஒரு சக்திமிக்க இனம். தன்னிகரற்ற ஒரு தனித்துவமான இனம். தனித்துவமான மொழியையும் பண்பாட்டு வாழ்வையும் வரலாற்றையும் கொண்ட ஒரு பெருமைமிக்க இனம். இப்படியான எமது அருமை பெருமைகளையெல்லாம் அழித்து, தமிழீழ தேசத்திலே தமிழரின் இறையாண்மையைத் தகர்த்துவிட்டு, இராணுவப் பலத்தால் சிங்களம் தனது இறையாண்மையை திணித்துவிடத் துடிக்கிறது. தமிழரின் சுதந்திர இயக்கம் என்ற வகையில், நாம் எமது மண்ணில் சிங்கள ஆக்கிரமிப்பிற்கோ சிங்கள ஆதிக்கத்திற்கோ என்றுமே இடமளிக்கப்போவதில்லை.
எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.
இந்த வரலாற்றுச் சூழமைவில், தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி, எமது போராட்டத்தின் நியாயப்பாட்டினையும், எம்மீது நிகழ்த்தப்படும் இனவழிப்பினையும் உங்கள் தேசங்களில் வெளிப்படுத்த வேண்டிய வரலாற்று கடமையினை தொடர்ந்தும் செய்யுமாறு கேட்டு கொள்கிறோம். அத்துடன் தமிழ் மக்களின் நியாயமான அபிலாசைகளை வெளிப்படுத்த தடையாக இருக்கும் எமது விடுதலை இயக்கத்தின் மீதான தடையினை நீக்க உங்கள் நாட்டின் சட்டவரைமுறைகளினூடாக போராடுமாறும் அழைப்பு விடுக்கிறோம்.
இச்சந்தர்ப்பத்தில் எமது தேசத்தின் விடுதலை பணியினை களத்திலும் புலத்திலும் முன்னெடுக்கும் இளைய சமூகத்தினருக்கு எமது அன்பையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம். மேலும் உங்கள் பணிகளை இன்றைய உலகின் நவீன வடிவங்களுக்கு மாற்றி மேலும் புதிய உத்வேகத்துடன் தீவிரப்படுத்துமாறும் வேண்டிக்கொள்கின்றோம்.
சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோமென உறுதியெடுத்துக்கொள்வோமாக.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
பொறுப்பாளர்
அனைத்துலகத் தொடர்பகம்
தமிழீழ விடுதலைப் புலிகள்