நடிகை குஷ்பு உத்திராட்ச மாலையில் தாலி அணிந்து மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். திருமணத்துக்கு முன்பே செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை என்ற கருத்தை வெளியிட்டு குஷ்பு முதன் முதலாக சர்ச்சையில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். தமிழ் அமைப்புகள் மற்றும் மகளிர் அமைப்புகள் நாடு முழுவதும் குஷ்புவை கண்டித்து போராட்டங்கள் நடத்தின. அவர் மீது அழுகிய முட்டை, தக்காளிப் பழங்கள் வீசப்பட்டன. கோர்ட்டுகளிலும் பல வழக்குகள் தொடரப்பட்டன.
அதைத் தொடர்ந்து ஒரு சினிமா படவிழாவில் அவர் பங்கேற்றபோது மேடையில் வைத்திருந்த அம்மன் சிலை முன்பு செருப்பு அணிந்தபடி கால்மீது கால்போட்டு அமர்ந்திருந்தார். இதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. குஷ்புவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இதற்காக குஷ்பு வருத்தம் தெரிவித்ததைத் தொடர்ந்து அந்தப் பிரச்சினை அடங்கியது.
கடந்த ஆண்டு ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் நடந்த ஒரு தெலுங்குப் பட விழாவுக்கு கிருஷ்ணர் மற்றும் ஆஞ்சநேயர் படங்கள் அச்சிட்ட சேலையை அணிந்து வந்து குஷ்பு சர்ச்சையை ஏற்படுத்தினார். இதற்கும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில் குஷ்பு உத்திராட்ச மாலையில் தாலி அணிந்து புதிதாக ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். இதற்காக அவர் மீது கும்பகோணம் கோர்ட்டில் இந்து மக்கள் கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது.
“”உத்திராட்ச மாலையில் குஷ்பு தாலி அணிந்திருப்பது இந்து மதத்துக்கு எதிரானது. இந்துக்கள் மனதை புண்படுத்தக் கூடியது”” என்று வழக்கின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சர்ச்சை தொடர்பாக குஷ்புவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தவும் இந்து அமைப்புகள் தயாராகி வருகின்றன.