மீண்டும் சிறையில் அடைக்கப்படவுள்ள விமல்?

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச உட்பட எழுவருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற நீதவான் லால் ரணசிங்க பண்டார, நேற்று (24) உத்தரவிட்டார்.  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைனின் இலங்கை விஜயத்தை  எதிர்த்து, 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி, விமல் எம்.பி உட்பட குழுவினர், கொழும்பு – 07, பௌத்தாலோக மாவத்தையில் உள்ள இலங்கைக்கான ஐ.நா அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்தினர்.

இவர்கள் ஏழுபேரும், அனுமதியின்றி ஒலிபெருக்கியைப் பயன்படுத்தியதுடன், வாகன நெரிசலை உண்டாக்கி மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தினர் என்று, கறுவாத் தோட்டம் பொலிஸாரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.  குற்றச்சாட்டுடன் சம்பந்தப்பட்ட, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, ஜயந்த சமரவீர, வீரகுமார திஸாநாயக்க, பியசிறி விதானகே, ரொஜேர் செனவிரத்ன, மொஹமட் முஸம்மில் மற்றும் சமிந்த ஜயலால் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

அவர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளதாக, கறுவாத் தோட்டம் பொலிஸாரால் கடந்த அமர்வில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, அதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.  ஏழாவது சந்தேகநபரான சமிந்த ஜயலால் மன்றுக்கு ஆஜராகியிருக்கவில்லை. அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் அவருடைய முகவரி மாற்றப்பட்டுள்ளதால், அவரின் நோட்டீஸைப் பொறுப்பேற்க யாரும் இருக்கவில்லை என்றும் பொலிஸார், மன்றுக்கு அறிவித்தனர்.  குறித்த சந்தேகநபரைக் கண்டுபிடிக்குமாறு உத்தரவிட்ட நீதவான், இந்த வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 18ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

ஐ.நாகுற்றப்பத்திரிகைகைதுசிறைவிமல் வீரவன்ச
Comments (0)
Add Comment