தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 37 பேரை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கையில் வைக்கப்பட்டுள்ள 45 மீன்பிடி படகுகளையும் மீட்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச கடல் எல்லை நிர்ணயம் மற்றும் கச்சத்தீவு போன்ற பிரச்னைகள் தீர்க்கப்பட்டு விட்டதாக கருதுவதை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ள ஜெயலலிதா, கச்சத்தீவை மீட்பது ஒன்றே பாக் ஜலசந்தி அருகில் மீன் பிடிப்பதற்கான தமிழர்களின் பாரம்பரிய உரிமையை மீட்டுத் தருவதற்கான வழி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட காலமாக உள்ள தமிழக மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்னையைத் தீர்க்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகவும் முதலமைச்சர் ஜெயலலிதா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.