மீனவர் பிரச்சனைக்கு இலங்கையை ஊக்குவிக்கின்றது இந்தியா

தமிழக மீனவர்களை ஒழித்து விட வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் இலங்கையை ஊக்குவிக்கும் வகையில் இந்தியா படகுகள் உள்ளிட்ட உதவிகளை வழங்குவது கடுமையாக கண்டிக்கத்தக்கது என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.  

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கை மீனவர்களுக்கு நான்கரை கோடி ரூபாய் மதிப்புள்ள படகுகளையும், மீன்பிடி கருவிகளையும் வழங்க இந்தியா முன்வந்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். தமிழக மீனவர்களுக்கு தீமையை, தவிர வேறு எதையும் செய்யாத இலங்கையை நல்லெண்ணம் கொண்ட நாடாக எப்படி பார்க்க முடியும் என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த இரண்டரை மாதங்களில் 99 மீனவர்களை கைது செய்ததுடன், 82 படகுகளையும் இலங்கை பறிமுதல் செய்து வைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ள ராமதாஸ், இப்படிப்பட்ட இலங்கைக்கு உதவி செய்வது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் இழைக்கப்படும் அவமானம் என கூறியுள்ளார்.   இந்திய அரசால் வழங்கப்படும் உதவிகள் முல்லைத்தீவில் உள்ள தமிழர்களுக்குத் தான் வழங்கப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று கூறியுள்ள ராமதாஸ், தமிழக மீனவர்களையும் படகுகளையும் விடுவித்தால் தான் இலங்கைக்கு உதவி செய்வது குறித்து சிந்திக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியாஇலங்கைகஉதவிஊக்கம்கட்சிகண்டிப்புதமிழகம்நிறுவனர்மக்கள்மீனவர்கள்ராமதாஸ்
Comments (0)
Add Comment