இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினையைத் தீர்க்கும் நோக்குடன் இரு நாட்டு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுக்கள் எதிர்வரும் 29 ம் திகதி புதுடில்லியில் நடைபெறவுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நிமால் ஹெட்டியாராச்சி, கடற்றொழில் அமைச்சின் ஆலோசகர் கலாநிதி எஸ். சுபசிங்க மற்றும் நீதி அமைச்சின் அதிகாரி ஒருவரும் கலந்து கொள்ளவுள்ளனர். இவர்கள் நாளை புதுடில்லி புறப்பட்டுச் செல்லவுள்ளனர். கடந்த மே மாதம் 12 ஆம் திகதி தமிழக மீனவர்களுக்கும் இலங்கை மீனவர்களுக்கும் இடையேயான பேச்சு எந்தவித முடிவும் எட்டப்படாமல் முடிவடைந்தது.
அதன் பின்னர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுநடத்துவதே சிறந்தது என்ற முடிவுக்கு இருதரப்பும் வந்திருந்தனர். கடந்த மே 12ம் திகதி கொழும்பில் நடந்த பேச்சுக்களில் தமிழக விசைப்படகு மீனவர்கள் தடை செய்யப்பட்ட வாருதல் (trawling) மீன்பிடி மற்றும் இரட்டைமடி மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதை முற்றிலுமாக கைவிட வேண்டும் என இலங்கை மீனவப் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். ஆனால் இந்த மீன்பிடி முறையை மாற்றிக்கொள்ள 3 ஆண்டு கால அவகாசம் வேண்டும் எனவும் இலங்கை கடற்பரப்பில் ஆண்டுக்கு 120 நாட்களுக்கு மீன் பிடிப்பதற்கு பதிலாக 90 நாட்களாக குறைத்துக் கொள்கிறோம் எனவும் தமிழக மீனவர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் இதை ஏற்க இலங்கை பிரதிநிதிகள் மறுத்து விட்டனர். மேலும் தமிழக மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை அழித்து வருவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில் கடற்றொழில் அமைச்சின் செய்தி தொடர்பாளர் தெரிவிக்கையில், ‘இந்தியா, இலங்கை மீனவர் பிரச்சினைக ளுக்கு தீர்வுத் திட்டம் ஒன்றை ஏற்படுத்த இரு நாட்டு மீன்பிடி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி தீர்மானமொன்று பெறுவதற்கு முன்னதாக இருநாட்டு அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த் தையை நடத்த தீர்மானித்துள்ளோம் என்று தெரிவித்தார். புது டில்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் 65 படகுகளையும் விடுவிக்க இலங்கை எதிர்பார்ப்பதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் இதனை கடற்றொழில் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ண திட்ட வட்டமாக மறுத்தார்.