இந்த சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் குறித்து பேசப்பட்டதுடன், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றும் முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
தமிழர் உரிமைக்கான மாணவர் இளைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் இந்த மனு கையளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் இலங்கை விடயம் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர் பகுதிகளின் வீடுகளில் இராணுவத்தினர் குடியேறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், விரைவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய பிரதமர், குறித்த விடயம் தொடர்பில் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த விடயம் தொடர்பில் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யுத்தக் குற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானமான, கலப்பு நீதிமன்ற விசாரணையை வலியுறுத்தி 18 மாதங்கள் கடந்துள்ளன.
எனினும், இலங்கை அரசு அந்த விசாரணைகளை நீர்த்து போக செய்வதற்கான உள்நோக்கத்துடன், மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாம் கோரியுள்ளது.
இந்நிலையில், கால அவகாசம் என்ற கோரிக்கைக்கு இந்திய அரசாங்கம் மறுப்பு தெரிவிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய இலங்கை அரசின் உடன்படிக்கையின் படி நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டிய வடக்கு கிழக்கு இணைப்பை இலங்கை அரசு கடந்த 30 ஆண்டுகளாக நிறைவேற்ற தவறியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த இருவருக்கும் இடையிலான சந்திப்பு பின்னர் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த சந்திப்பு இன்று திடீரென இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.