தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22–ந் தேதி உடல்நல குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கடந்த 20 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.
அப்பல்லோ மருத்துவ குழுவினருடன், லண்டனில் இருந்துவந்த டாக்டர் ரிச்சர்டு ஜான்பீலே, டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் ஆகியோரும் இணைந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். டாக்டர்களின் இந்த தொடர் சிகிச்சையால் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி திடீரென்று சென்னை வந்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவரும் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று அவரது உடல்நலம் பற்றி விசாரித்தார். டாக்டர்களிடம் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் பற்றியும் கேட்டார்.
மத்திய மந்திரிகள் வெங்கையா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன், கேரள முதல்–மந்திரி பினராயி விஜயன், கவர்னர் சதாசிவம், புதுச்சேரி முதல்–மந்திரி நாராயணசாமி, கவர்னர் கிரண்பெடி, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல தமிழக தலைவர்களும் மருத்துவமனைக்கு வந்து ஜெயலலிதா உடல்நலம் பற்றி விசாரித்து செல்கிறார்கள்.
முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் பற்றி விசாரிப்பதற்காக டெல்லியில் இருந்து பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி ஆகியோர் இன்று (புதன்கிழமை) சென்னை வருகிறார்கள்.
டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் அவர்கள் சென்னை விமான நிலையத்தில் இருந்து காரில் அப்பல்லோ மருத்துவமனைக்கு மாலை 5 மணி அளவில் செல்கிறார்கள்.
அமித்ஷா வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.