மும்பை தாக்குதல் தீவிரவாதி லக்விக்கு ஜாமின் வழங்கப்பட்டதற்கு எதிரான பாகிஸ்தான் அரசின் மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் இந்த விசாரணை நடைபெற உள்ளது. மும்பை தாக்குதல் சம்பவத்தின் மூளையாகச் செயல்பட்ட ரஹ்மான் லக்விக்கு கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக லக்வி மீண்டும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
இதனை எதிர்த்து லக்வி சார்பாக தொடரப்பட்ட மனுவில் தடுப்பு காவலை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனால் லக்வி விடுதலையாகும் சூழல் ஏற்பட்டது. எனினும் பாகிஸ்தான் அரசு ஆள்கடத்தல் வழக்கில் மீண்டும் லக்வியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.