முல்லைத்தீவு மாவட்டத்தில் ஊடக பணிசெய்யும் ஊடக வியலாளர் ஒருவரின் வீடு கடந்த 12.03.19 அன்று உடைத்து கமராக்கள்,மடிக்கணணி உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதுடன் உண்ணாப்புலவு பகுதியிலும் வீடு ஒன்றில் கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை தொடர்ந்து முல்லைத்தீவு பெருங்குற்றத்தடுப்பு பொலீசார் மேற்கொண்ட விசாரணைகளை தொடர்ந்து இரண்டு கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரை 17.03.19 அன்று கைதுசெய்துள்ளார்கள்.
இந்த கொள்ளையர்கள் தொடர்பில் மேலும் தெரியவருகையில் முல்லைத்தீவு நகர் மற்றும் அதனைஅண்டிய பகுதிகளில் இடம்பெறும் கொள்ளைச்சம்பவங்கள் குறித்து கண்காணிப்பதற்காக முல்லைத்தீவு பெருங்குற்றப்பிரிவு குழுவினர் தீவிர கண்காணிப்பு மற்றும் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், கடந்த வாரத்தில் உண்ணாப்புலவு பகுதியில் வீடு ஒன்றில் இருந்து தொண்ணூறாயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு பணம் பொருட்கள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன
இச்சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளர் மேற்கொண்ட முறைப்பாட்டினை தொடர்ந்து வெளிநாட்டு பணத்தினைமாற்றுவதற்காக சென்ற நபரை முல்லைத்தீவு நகரில் சி.சி.ரிவி ஊடாக அடையாளம் கண்டு அவரின் இருப்பிடம் அறிந்து கொண்டுள்ளார்கள்
அவரின் நடவடிக்கையினை பின் தொடர்ந்த முல்லைத்தீவு பொலீசார் செல்வபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தங்கி நின்ற வேளை குறித்த நபரை கைதுசெய்துள்ளார்கள்.
இதன்போது திருகோணமலையினை சேர்ந்த 32 அகவையுடைய ச.றமேஸ் என்பவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குற்றவாளிக்கு உடந்தையாக இருந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட திருகோணமலையினை சேர்ந்த நபர் செல்வபுரம் பகுதியில் திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில் அவரையும் பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.
இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையினை தொடர்ந்து முல்லைத்தீவு பகுதியில் ஊடகவியலாளர் மற்றும் ஏனைய வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை திருகோணமலை சென்று விற்றுவந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதேவேளை திருகோணமலையினை சேர்ந்த குற்றவாளி திருகோணமலையில் நான்கு கஞ்சா வழங்குகள் பதிவாகியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குற்றவாளிகள் கொடுத்த வாக்குமூலத்திற்கு அமைவாக கொள்ளையடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட ஊடகவியலாளரின் மடிக்கணிணி மற்றும் இரண்டு கமரா உள்ளிட்ட மூன்று இலட்சத்தி எண்பத்தி ஆறாயிரம் ரூபா பெறுமதியான பொருட்கைள முல்லைத்தீவு பொலீசார் மீட்டுல்லனர்.
அதோடு ஏனைய கொள்ளையடித்து விற்பனை செய்யப்பட்ட பொருட்களையும் மீட்டுள்ளார்கள்.
இரண்டு குற்றவாளிகளிடமும் மேலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன் 18.03.19 அன்று இருவரையும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக முல்லைத்தீவு பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.