முல்லைப்பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதியில் கேரள அரசு மேற்கொள்ளும் வாகன நிறுத்தப் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இதனையடுத்து இந்த பணிகளை கேரள அரசு நிறுத்தி வைக்குமாறு தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இந்நிலையில் நீதிபதி ஜோதிமணி அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வாகன நிறுத்தப் பணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என கேரளா சார்பில் வலியுறுத்தப்பட்டது.
அதேவேளையில் இந்த பணிகளை தொடர்வதற்கு அனுமதிக்கக் கூடாது என தமிழகம் சார்பில் வாதிடப்பட்டது. மேலும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் குத்தகைக்கு விடப்பட்டுள்ள இடம் சரியாக வரையறுக்கப்படவில்லை எனவும், இதனை சரியாக வரையறுக்க உத்தரவிட வேண்டும் எனவும் வாதிடப்பட்டது. இரண்டு தரப்பு வாதங்களுக்கு பின்னர்,வழக்கு விசாரணை நவம்பர் 4-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.