மே 18ஆம் திகதி ஈழதமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத நாள்.
இந்நிலையில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து வட மாகாண சபையினர் நாளைமறுதினம் ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் அமைச்சில் முற்பகல் 10 மணிக்கு இது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.
இதற்காக மாகாண சபையின் அவைத் தலைவர், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களாக வடக்கு மாகாண சபையே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஏற்பாடு செய்து நடத்திவருகிறது.
வழமைபோன்று இந்த முறையும் அது தொடர்பில் ஒழுங்குகளை மேற்கொள்ள இந்தக் கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம்
இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனைவரும் ஒருமித்து ஒரே இடத்தில் நினைவுகூர வேண்டும் என யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் அவர்கள் ஊடக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் நினைவேந்தலை ஓரிடத்தில் ஒற்றுமையாக நடத்த ஒத்துழைக்குமாறு பல்கலைக்கழக மாணவர்கள் விடுத்த கோரிக்கையைத் தாம் ஏற்றுக்கொள்வதாகவும்,
மாணவர்களுடன் இணைந்து நிகழ்வை நடத்துவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிகள் தீர்மானித்துள்ளதாகவும் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் விடுத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.