சுதந்திர இலங்கையில் காலாதிகாலமாக கட்டமைக்கப்பட்ட ரீதியில் தமிழ் மக்களிற்கு எதிராக இடம்பெற்ற இன அழிப்பின் உச்சமே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ஆகும்.
இறுதிப் போரில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவிப் பொது மக்களினை நினைவுகூர்ந்து ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட மே-18 ஆம் திகதியில் வருடாந்தம் தமிழ் மக்கள் தமது உறவுகளினை நினைவுகூரும் வகையில் அன்றைய நாளினை தமிழினப் படுகொலை நினைவேந்தல் நாளாக பிரகடனப்படுத்தி உலகம் பூராகவும் பரவிவாழும் தமிழ் மக்கள் மே-18ல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலினை அனுஷ்டித்துவருகின்றனர்.
ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு பத்தாண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையிலும் இதுவரையில் இறுதிப் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் மற்றும் இன அழிப்பு தொடர்பில் விசாரணைகளினை முன்னெடுத்துச் செல்லவோ அல்லது எமக்கான நீதியினைப் பெற்றுத்தரவோ உலக நாடுகள் இதயசுத்தியுடன் கரிசனை செலுத்தாத நிலையில் நாம் இன்றும் பல்வேறு வழிகளில் நீதிக்கா போராடிக் கொண்டிருக்கிறோம்.
இந்நிலையில் பத்தாம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்யவென குழு ஒன்று அமைக்கப்பட்டு நினைவேந்தலிற்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியாகியுள்ள நிலையில் அனைவரும் கட்சி பேதங்களற்ற வகையில் ஒன்று திரண்டு உயிரிழந்தவர்களின் உறவுகளிற்காக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தலில் பங்குகொண்டு தமிழ் மக்களிற்கு எதிராக இடம்பெற்ற கட்டமைக்கப்பட்ட இன அழிப்பிற்கு நீதிக்கோரும் பயணத்தில் சங்கமிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்காலில் காலை 10:30 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகும்.
மாணவர் ஒன்றியம்,யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.