மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும் – அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னையில் மெட்ரோ ரயில் சேவைக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது குறித்து தமது முகநூல் பக்கத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்காலத்தில் திட்டம் தொடங்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார். மாநகரம் முழுமைக்கும் இந்தத் திட்டத்தை விரிவு படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக கூறியுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தியதன் நோக்கம் நிறைவேற உடனடியாகக் கட்டணக்குறைப்பு செய்ய வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார்.

 மெட்ரோ ரயில்சேவைத் தொடக்க விழாவுக்கு மத்திய அரசு பிரதிநிதிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை அழைக்காததற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், டெல்லியை விட 250 விழுக்காடு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக விமர்சித்துள்ளார்.

மெட்ரோ ரயில் கட்டண விவரம்:

சென்னை மெட்ரோ ரயிலில் குறைந்தபட்சமாக 10 ரூபாயும், அதிகபட்சமாக 40 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆலந்தூரில் இருந்து ஈக்காட்டுதாங்கல் வரை 10 ரூபாயும், அசோக் நகருக்கு 20 ரூபாயும், வடபழனி வரை 30 ரூபாயும், கோயம்பேடு வரை 40 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆலந்தூரில் இருந்து கோயம்பேடு வரை மெட்ரோ ரயிலில் செல்ல 19 நிமிடங்கள் பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது. இதே பயணதூரத்தை குளிர்சாதன வசதி கொண்ட பேருந்தில் கடக்க தோராயமாக 40 நிமிடங்கள் பிடிக்கும். மெட்ரோ ரயில் சேவையானது காலை 6 மணியிலிருந்து இரவு 10 மணிவரை ரயிலானது இயக்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல்ஆலந்தூர்கட்டணம்கோயம்பேடுசென்னைசேவைதலைவர்கள்மத்திய அரசுமெட்ரோ ரயில்வலியுறுத்தல்
Comments (0)
Add Comment