சாந்தோம் பகுதியில் குறுகலான காமராஜர் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, மெரினா லூப்சாலை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. விரைவில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை கான்கிரீட் சாலை அமைக்கப்பட உள்ளது.
சென்னையின் இதயபகுதியான அண்ணாசாலை மற்றும் கடற்கரை சாலையான காமராஜர் சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்ப்பதற்கு மாநகராட்சி, காவல் துறை உள்ளிட்ட துறைகள் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, குறுகலான சாலைகளை விரிவுப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அந்தவகையில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பயணம் செய்யும் காமராஜர் சாலையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக காமராஜர் சாலையில் கலங்கரை விளக்கம் பகுதியில் இருந்து சாந்தோம் வழியாக பட்டினப்பாக்கம் வரை உள்ள சாலை மிக குறுகலாக இருப்பதால் அலுவலக நேரங்களில் இந்த சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. அடையாறில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும். மாறாக காமராஜர் சாலையில் இருந்து அடையாறு நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும் கலங்கரை விளக்கம் அருகில் தடுத்து நிறுத்தப்பட்டு, மெரினா கடற்கரை லூப் சாலை வழியாக திருப்பி விடப்படுகிறது.
அவ்வாறு திருப்பி விடும் போது லூப்சாலையில் உள்ள மீன்சந்தையில் கூட்டம் அதிகம் காணப்படுவதுடன், சாலையும் குறுகலாக இருப்பதால், இப்பகுதியிலும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி வாகனங்கள் சாரை, சாரையாக ஊர்ந்து செல்லும் நிலை தான் தற்போது உள்ளது. இதனை மாற்றுவதற்காக லூப்சாலையின் இரு பகுதியிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி சாலையை விரிவுப்படுத்த மாநரகாட்சி நிர்வாகம் திட்டமிட்டு பணிகள் தொடங்கின.
ஆனால் அப்பகுதியில் வசிப்பவர்கள் சாலை விரிவாக்கம் செய்தால், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து தடை ஆணை பெற்றனர். இதனால் பணிகள் நிறுத்தப்பட்டன. இந்தநிலையில் தற்போது தடை ஆணை விலக்கப்பட்டு சாலை அகலப்படுத்தும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. விரைவில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- மெரினா கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை காமராஜர் சாலை குறுகலாக இருப்பதால், டவுன் பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் அதிகம் செல்வதால் அலுவலக நேரம் உள்பட அனைத்து நேரங்களிலும் இப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் மாற்று ஏற்பாடாக கலங்கரை விளக்கம் முதல் மெரினா லூப் சாலை வழியாக பட்டினப்பாக்கம் பஸ் நிலையம் வரை உள்ள 2.5 கிலோ மீட்டர் தூரம் சாலையை அகலப்படுத்தி, காங்கிரீட் சாலை அமைக்கப்பட உள்ளது.
இந்தப்பணி ரூ.47.5 கோடி செலவில் நடைபெறும். கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை லூப்சாலையின் கிழக்கு பகுதியில் மீன்கடைகள், பெட்டி கடைகள், குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளதால் சாலை விரிவாக்க பணி தடைப்பட்டது. பசுமை தீர்ப்பாயம் விதித்த தடை ஆணையும் இருந்து வந்தது. இதுகுறித்து உரிய முறையில் வழக்கு நடத்தப்பட்டு, தடை ஆணை தற்போது விலக்கப்பட்டு உள்ளது. இதனால் தற்போது இந்தப்பாதையில் சாலை விரிவாக்க பணி தொடர்ந்து நடந்து வருகிறது. விரைவில் இப்பகுதியில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.