விளையாட்டு மைதானங்களை பிற நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்த அனுமதிக்கத் தடைவிதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், விதிமுறைகளை வகுக்குமாறு மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அசோக் நகரைச் சேர்ந்த வாலீஸ் கிளப் அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தது.
அந்த மனுவில், மாநகராட்சி விளையாட்டு மைதானங்களில் உணவுத் திருவிழா போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதால், விளையாட்டு மைதானங்கள் பாழாகும் நிலை உருவாகியுள்ளதாக கூறியிருந்தது. மேலும், விளையாட்டு மைதானங்களில் பிற நிகழ்ச்சிகள் நடத்த தடைவிதிக்க வேண்டும் என்று அந்த அமைப்பு தெரிவித்திருந்தது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய அமர்வு, விளையாட்டு மைதானங்களில் தனியார் நிகழ்ச்சிகள அனுமதிப்பது குறித்து விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதா என் கேள்வி எழுப்பினர். அப்போது மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சௌந்தராஜன், விதிமுறைகள் வகுக்கப்படவில்லை என்று கூறினார். இதையடுத்தும் விளையாட்டு மைதானங்களில் பிற நிகழ்ச்சிகளை நடத்த விதிமுறைகளை வகுக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.