இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு நேற்றையதினம் சிறிலங்காவுக்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன இராப்போசன விருந்தளித்து கௌரவப்படுத்தினார்.
இவ்விருந்துபசாரத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் கலந்துகொண்டார்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண முதலமைச்சர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனக்கு கைலாகு கொடுத்து நலம் விசாரித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அவருடன் கதைக்கும் சந்தர்ப்பம் தனக்கு கிடைக்கவில்லை என்றும் அவருடன் விஜயம் செய்த வெளியுறவுத்துறைச் செயலாளர் ஜெய்சங்கரிடம் சில விடயங்களைத் தெரியப்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பலாலி விமான நிலையத்தை மக்களின் காணிகளை சுவீகரிக்காத வகையில் பிராந்திய விமான நிலையமாக மாற்றவேண்டும் என்றும் இதனை வர்த்தக நடவடிக்கைக்கு பயன்படுத்த கூடியவாறு அமைக்க வேண்டும் என தான் வலியுறுத்தியதாகவும் வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.