மோடி அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவு திட்டம்

இந்தியர்களுக்கான சமூகப் பாதுகாப்பு அமைப்பை மத்திய அரசு உருவாக்கும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் மக்களவையில் நேற்று சனிக்கிழமை இந்த ஆண்டுக்கான (2015-2016) இந்திய வரவுசெலவுத் திட்ட அறிக்கையை தாக்கல் செய்த போதே அவர் இதனைக் கூறினார்.

மோடி அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் தாக்கல் செய்யப்படும் முதலாவது முழுமையான வரவுசெலவுத் திட்டத்தில், பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ளப்போகும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கறுப்புப் பணம் தொடர்பிலான சட்டதிட்டங்களில் கடுமையான தண்டனைகளை கொண்டுவரும் அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

சொத்துக்களை மறைத்தால் 7- ஆண்டு சிறை

அதன்படி, வெளிநாடுகளில் உள்ள சொத்து விபரங்களை மறைத்தால் 7-ஆண்டு சிறை உள்ளிட்ட தண்டனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அத்தோடு, பணப் பரிமாற்றங்களில் வெளிப்படைத் தன்மையை பேணவும் பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை வரவுசெலவுத் திட்டத்தில் நாட்டின் மேம்பட்ட வளர்ச்சி மற்றும் சமூகப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் உள்நாட்டு கட்டமைப்பு, மின்சக்தி உருவாக்கம் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.

குறிப்பாக, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் அடுத்தக்கட்ட திட்டம் உள்ளிட்ட 5 பெரிய மின்நிலைய திட்டங்கள் பற்றி இம்முறை வரவுசெலவுத் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

தனிநபர் வரிச்சலுகைகளில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. ஆனால் மருத்துவக் காப்பீட்டுக்கு செலுத்தும் தொகையிலும் மற்றும் போக்குவரத்து செலவினங்களிலும் வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறே 12.36 சதவீதமாக இருந்த சேவை வரி தற்போது 14 வீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் தொலைபேசி கட்டணங்கள், உணவு விடுதி கட்டணங்கள் உள்ளிட்ட பல முக்கிய விலைவாசிகள் உயரும் நிலை உருவாகியுள்ளது.

150 நாடுகளின் பிரஜைகளுக்கு ஆன் அரைவல் வீசா

பிரதமர் மோடியால் முன்னெடுக்கப்பட்ட ‘ஸ்வச் பாரத்’ எனப்படும் தூய்மையான இந்தியாவை உருவாக்கும் திட்டத்திற்காக வழங்கப்படும் நிதிக்கு 100 வீத வரிவிலக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஊக்குவிப்பதற்காக 43 நாடுகளுக்கு மட்டும் வழங்கப்பட்டிருந்த ‘வீசா ஆன் அரைவல்’ எனப்படும் விமானநிலையத்தில் எளிதாக வீசா அனுமதி பெறும் நடைமுறை இனிமேல் 150 நாடுகள் என்கிற அளவிற்கு விரிவாக்கம் செய்யப்படும் என்றும் அருண் ஜெட்லி கூறினார்.

பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ள இந்த வரவுசெலவுத் திட்டத்துக்கு முக்கிய எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து அதிருப்தி வெளியிட்டுள்ளன.

குறிப்பாக, விவசாயத்துறைக்கு முக்கிய கவனம் செலுத்தப்படவில்லை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறைகூறினார்.

அவ்வாறே, பெருநிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட நிதியறிக்கையாக இது உள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இடதுசாரி கட்சிகளின் தலைவர்களும் தங்களின் கண்டனங்களை பதிவுசெய்துள்ளனர்.

அமைப்புஅரசாங்கம்அருண்ஜெட்லிஅறிக்கைஇந்தியர்கள்சமூகம்செலவுநிதியமைச்சர்பாதுகாப்புமத்தியஅரசுமோடிவரவு
Comments (0)
Add Comment