நிகழாண்டு நாடு முழுவதும் பருவ மழை சராசரிக்கு அதிகமாக இருந்தாலும், கேரளம், கர்நாடகம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் தென் மேற்கு பருவ மழை 50 சதத்துக்கும் குறைவாகத்தான் பெய்துள்ளது. வடகிழக்குப் பருவமழையும் சரியாகத் தொடங்கப்படவில்லை. எனவே, விவசாயிகள் கடுமையான துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர்.
காவிரி பிரச்னை பொருத்தவரை தமிழகத்துக்குச் சாதகமாகவே பாஜக அரசுச் செயல்பட்டு வருகிறது. காவிரி டெல்டா பகுதியைப் பாலைவனமாக்கிய கட்சித் தலைவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மோடி அரசுத்தான் தமிழகத்துக்குத் துரோகம் செய்துவிட்டதாகப் போராட்டம் நடத்துவது, அறிக்கை விடுவது என்பது தமிழக மக்களை, குறிப்பாக விவசாயிகளைத் திசை திருப்பும் செயலாக இருக்கிறது. ஆனால், காவிரி பிரச்னையில் தமிழகத்துக்குத் துரோகம் செய்தது திமுகதான்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கமாட்டோம் என பாஜக கூறவில்லை. இந்த வாரியத்தை மோடி அரசு நிச்சயமாகக் கொண்டு வரும். ஆனால், பிற்காலத்தில் யாரும் கேள்வி கேட்க முடியாத அளவுக்குப் பாராளுன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு காவிரி மேலாண்மை வாரியத்தை மோடி அரசு அமைக்கும்.
பொது சிவில் சட்டத்தை நம்மால் கொண்டு வர முடியும். அச்சட்டத்தைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதறகுப் போதுமான பெரும்பான்மை பலம் பாஜகவுக்கு உள்ளது. அதனால், விவாததுக்குத்தான் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அச்சட்டம் நிறைவேற்றப்படும் என்பதால் யாரும் கவலைப்படத் தேவையில்லை என்றார் எச். ராஜா.
பின்னர், நடைபெற்ற பாஜக மூத்தத் தலைவர் எல்.கே. அத்வானியின் பிறந்த நாள் விழாவுக்கு பாஜக தேசிய செயற் குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான இல. கணேசன் தலைமை வகித்தார். இதில், தஞ்சாவூர் தொகுதி பாஜக வேட்பாளர் எம்.எஸ். ராமலிங்கம், மாநிலப் பொதுச் செயலர் கருப்பு எம். முருகானந்தம், மாவட்டத் தலைவர் ஆர். இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, தஞ்சாவூரில் எச். ராஜா, இல. கணேசன் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர்.