யாழில் பட்டப் பகலில் இந்திய துணைத்தூதுவர் அலுவலக அதிகாரியின் வீடு உடைத்து லட்சம் பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்கள் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த கொள்ளைசம்பவம் யாழ். நாவலர் வீதி குறுக்கு வீதியில் உள்ள அவரது வீட்டில் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய துணைத் தூதுவர் அலுவலக அதிகாரி காலை 8.30 மணியளவில் சென்று மாலை 6.30 மணியளவில் வீட்டிற்குத் திரும்புவது வழமை.
வழமை போன்று நேற்றுக் காலையும் வீட்டை பூட்டி விட்டுச் சென்று மாலை வீட்டிற்கு வரும் போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்துள்ளது.
உள்ளே சென்று பார்த்த போது, வீட்டில் இருந்த 43 அங்குல ரீ.வி இரண்டும், ஸ்மாட் தொலைபேசிகள் இரண்டும், 5 ஆயிரம் ரூபா காசும் திருடப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில், யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.