யாழில் மக்களின் நிலங்களை கையகப்படுத்தியுள்ள அரசபடைகள்…

யாழ் குடாநாட்டில் தற்போது 93 கடற்படை முகாம்களும் 54 இராணுவ முகாம்கள் , ஒரு விமானப்படை தளம் ,18 பொலிஸ் நிலையம் உட்பட 30 பொலிஸ் அலுவலகம் இயங்குவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

சுமார் 5 லட்சம் மக்கள் வாழும் குடாநாட்டில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மீன்பிடியை நம்பியே வாழ்ந்து வருகின்றனர்

இந்த நிலையில் கடற்படையினரே அதிக இடங்களை அபகரித்து நிலைகொண்டுள்ளமையினால் மீனவர்களின் வாழ்வாதாரம் இன்றும் பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது.

இவ்வாறு நிலைகொண்டுள்ள கடற்படையினர் மக்களிற்குச் சொந்தமான 269 ஏக்கர் நிலத்தினையும் அரச காணிகளில் 260 ஏக்கரையும் அபகரித்தே நிலைகொண்டுள்ளனர்.

இதேவேளை யாழ்  குடாநாட்டின் சிவில் நிர்வாகச் செயல்பாட்டிற்காக செயல்படும் பொலிஸாரும் மக்களின் நிலங்களைக் கையப்படுத்தும் நடவடிக்கையில் செயலாற்றுகின்றதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன் வகையில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள 18 பொலிஸ் நிலையங்கள் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர்கள் அலுவலகம் , பொலிஸ் விடுதிகள் என மொத்தமாக 30 இடங்களில் மக்களின் நிலத்தைக் கையகப்படுத்தியே பொலிஸாரும் தங்கியுள்ளனர்.

தங்கள் நிலங்களை விடுவிக்குமாறு உரிமையாளர்கள் கோரிக்கை விடுக்கும் நிலையிலும், பல இடங்களை நிரந்தரமாக சுவீகரிக்கும் செயலில் பொலிஸார் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதன்காரணமாக நீதிமன்றை நாட உரிமையாளர்களும் தயாராகின்றனர்.

இதில் நெல்லியடிப் பொலிஸார் தற்போது தங்கியிருக்கும் வீட்டின் உரிமையாளர் வீட்டை ஒப்படைக்குமாறு கோர பதில்காணியை பொலிஸார் கோரியதற்கினங்க மாவட்டச் செயலகம் ஓர் நிலத்தை வழங்கியிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும் யாழ் குடாநாட்டில் இயங்கும் 18 பொலிஸ் நிலையங்களில் 14 பொலிஸ் நிலையங்கள் தனியார் காணியை அபகரித்தே இயங்குகின்றதாகவும்  கண்டறியப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அரசபடைகள்காணிகள்பொதுமக்கள்பொலிஸார்யாழ்ப்பாணம்
Comments (0)
Add Comment