யாழ். போதனா வைத்தியசாலைக்கு 60 வீத சிங்கள சிற்றூழியர்கள் நியமிப்பு….

 
எதிர்வரும் 15ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்  திறந்து வைக்கப்படவுள்ள அவசர விபத்துச் சிகிச்சைப் பிரிவுக்கு நியமிக்கப்படும் சிற்றூழியர்களில் 60 சதவீதமானோர்  சிங்களவர்கள்  என  தகவல்கள்  தெரிவிக்கின்றன.

யாழ்  போதனா வைத்தியசாலையில் அவசர விபத்துப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரிவு எதிர்வரும் 7ஆம் திகதி திறக்கப்படவிருந்த நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின்   வருகைதரும்போது அதனைத் திறப்பதற்கு ஏற்றதாக திறப்பு விழா பிற்போடப்பட்டுள்ளது.

புதிதாக திறக்கப்படும்  இந்த  விபத்துப் பிரிவுக்கு 100 சிற்றூழியர்கள் தேவை என கணிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வெற்றிடங்களை நிரப்பும் முயற்சியை சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் தென்னிலங்கையைச் சேர்ந்தோருக்கு அந்த நியமனங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இதற்கு வடக்கு தமிழ் அரசியல்வாதிகள் எதிர்ப்பு வெளியிட்டதைத் அடுத்து அவர்களின் பரிந்துரையின் பேரில் 40 பேருக்கு நியமனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்  அறியக்கிடைத்துள்ளது.
இது தொடர்பில் யாழ்போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறுகையில்,
புதிய சிகிச்சைப் பிரிவுக்கு 100 பேருக்கான வெற்றிடங்கள் இருக்கின்றன என்பது உண்மை எனினும் , அதற்கான   நியமன அதிகாரம் சுகாதார அமைச்சுக்குரியது எனவும் கூறியுள்ளார்.

மேலும் நியமனம் வழங்கப்பட்டுள்ளதா என்பது எமக்குத் தெரியாது. எமது வைத்தியசாலைக்கு கடமையைப் பொறுப்பேற்க வரும்போது நியமனம் வழங்கப்பட்டமை தெரியவரும் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறுகையில்,   நியமனங்கள்  வழங்கும்போது தமிழ், சிங்கள, முஸ்லிம் என பாகுபாடு பார்ப்பதில்லை என கூறியுள்ளார்.

அதோடு  வடக்குக்கான நடவடிக்கைளின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அறிவுறுத்தலுடன், அந்த மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுடன் பேசியே நடவடிக்கை எடுப்பதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன  கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஊழியர்கள்சிங்களவர்கள்சுகாதார அமைச்சர்யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைராஜித சேனாரத்ன
Comments (0)
Add Comment